பதுளையில் உள்ள செனசுன்கல புராண ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பதவி தொடர்பாக இரு தேரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு தேரர் தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளார்.
அத்தோடு மற்றுமொரு தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தேரரை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹியங்கனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த விகாரையின் முன்னாள் விகாராதிபதி காலமானதைத் தொடர்ந்து, விகாராதிபதி பதவிக்காக அளுகெட்டியாவே சீலவம்ச தேரர் மற்றும் கேசல்போத தேரர் ஆகிய இருவருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வந்துள்ளது.
இதற்கு முன்னரும் இவர்களுக்கிடையேயான மோதல்கள் தொடர்பாக மஹியங்கனை காவல் நிலையத்தில் பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு இரு தரப்பினருக்கும் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனைகளும் (Suspended Sentences) விதிக்கப்பட்டிருந்த பின்னணியிலேயே இந்த புதிய மோதல் வெடித்துள்ளது.
இந்தநிலையில் தான் விகாராதிபதியாக நியமிக்கப்பட்டதாகக் கூறும் கடிதம் ஒன்றுடன் விகாரைக்கு வருகை தந்த சீலவம்ச தேரர், அங்கு தங்கியிருந்த கேசல்போத தேரரிடம் விகாரையின் சாவிக்கொத்தைக் கோரியுள்ளார்.
இதன்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், சீலவம்ச தேரர் மேலும் இரு நபர்களுடன் சேர்ந்து கேசல்போத தேரரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இதையடுத்து தாக்குதலில் காயமடைந்த தேரர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகப் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
அராவ பகுதியில் தலைமறைவாகியிருந்த சந்தேகநபரான சீலவம்ச தேரரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.



