ஜப்பான் மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் திறன் மேம்பாட்டு வேலைவாய்ப்பு திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOC) கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் ஜப்பான் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2026 ஜூலை 23ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. ஜப்பான் தரப்பில் நீதி அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, சுகாதாரம், தொழில் மற்றும் நலன்புரி அமைச்சு மற்றும் தேசிய பொலிஸ் முகவரகம் ஆகிய நிறுவனங்களும், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சும் இந்த உடன்படிக்கையில் இணைந்துள்ளன.
இலங்கையுடன் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தொழில்நுட்ப பயிற்சி பயிலுநர் திட்டம் (Technical Intern Training Program) எதிர்வரும் 2027 ஏப்ரல் மாதம் முதல் நிறைவடைந்து, அதற்குப் பதிலாக திறன் மேம்பாட்டு வேலைவாய்ப்பு திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதனை முன்னிட்டு இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், திறன் மேம்பாட்டு ஊழியர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பின் அடிப்படையில் திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவதாகும்.
இதன்படி, ஜப்பான் தரப்பின் பொறுப்புகளாக, திறன் மேம்பாட்டு வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கண்காணிப்பு மற்றும் ஆதரவு அமைப்புகளுக்கான அனுமதிகள், வேலைவாய்ப்பு திட்ட அங்கீகாரங்கள் உள்ளிட்ட நிர்வாக நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்வது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஏதேனும் கண்காணிப்பு அல்லது ஆதரவு அமைப்புகளின் அனுமதி ரத்து செய்யப்பட்டால் அல்லது திட்ட அங்கீகாரம் நீக்கப்பட்டால், இலங்கை தரப்புக்கு அறிவிக்க ஜப்பான் உறுதியளித்துள்ளது.
அதேபோல், இலங்கை தரப்பில், திறன் மேம்பாட்டு ஊழியர்களை அனுப்பும் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கான நிர்வாக நடவடிக்கைகளை உரிய விதிமுறைகளுக்கு அமைவாக மேற்கொள்வது, தேவையான கண்காணிப்பு மற்றும் விசாரணைகளை முன்னெடுப்பது ஆகிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன
அங்கீகரிக்கப்பட்ட அனுப்பும் நிறுவனங்களில் முறைகேடுகள் தொடர்பில் தகவல்கள் கிடைத்தால், அவை குறித்து விசாரணை நடத்தி, தேவையான வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை ஜப்பான் தரப்புக்கு அறிவிக்க இலங்கை இணங்கியுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், இரு நாடுகளின் பிரதிநிதிகளும் தேவையான சந்தர்ப்பங்களில் கலந்தாலோசனைகளை மேற்கொண்டு, திறன் மேம்பாட்டு வேலைவாய்ப்பு திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள்.
இந்த ஒத்துழைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது



