இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து தீவக மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான எல்லைதாண்டிய சட்டவிரோத இழுவை மடி மீன்பிடியைக் கண்டித்து, யாழ்ப்பாணம் தீவகப் பகுதி மீனவர்கள் குறிகட்டுவான் இறங்குதுறை கடற்பரப்பில் படகுகளில் சென்று கறுப்புக்கொடி ஏந்தி வீரியமிக்க போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நெடுந்தீவு, நயினாதீவு, வேலணை, எழுவைத்தீவு மற்றும் அனலைதீவு போன்ற பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய மீனவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய இழுவைப் படகுகளால் தமது வாழ்வாதாரம் முற்றாகப் பாதிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

குறிப்பாக கடந்த ஜூலை 16 முதல் 18 ஆம் திகதி வரையிலான மூன்று நாட்களில் மட்டும், இந்திய விசைப்படகுகளால் 200க்கும் மேற்பட்ட இலங்கை மீனவர்களின் 5 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான நண்டு வலைகள் அறுத்தெறியப்பட்டு நாசமாக்கப்பட்டுள்ளன.

இந்திய இழுவை மடிப் படகுகள் கடலடித் தளங்கள், பவளப் பாறைகள் மற்றும் மீன்களின் இனப்பெருக்கப் பகுதிகளை அழித்து வடக்கின் கடல்சார் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இப்பிரச்சினைக்கு அரசாங்கம் உடனடித் தீர்வு காண வலியுறுத்தி ஜனாதிபதிக்கு அவசர கோரிக்கை மனு ஒன்றையும் மீனவர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இலங்கை-இந்திய இராஜதந்திர உறவுகளின் பெயரில் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பலியிடப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர்கள் அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

தமது போராட்டம் எந்தவொரு நாட்டிற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானது அல்ல என்றும், கடலையும் தங்களது பாரம்பரிய வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கான நீதியான குரல் இதுவென்றும் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.