இரகசிய அரசியலில் ஈடுபடுவதில்லை : நாமல் ராஜபக்ஷ

தேசிய நலன்களை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கூட்டணிகளை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக உள்ள போதிலும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் ரகசிய அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், பொதுஜன பெரமுன கட்சி எப்போதும் வெளிப்படையான அரசியல் கலாசாரத்தையே நம்புவதாகவும் மக்களுடனேயே இணைந்து பயணிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனிநபர்களின் சுயநலன்களை விட நாட்டின் தேவைகளுக்கே தமது கட்சி முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தமது கட்சியின் அரசியல் சித்தாந்தத்தையும் வேலைத்திட்டங்களையும் ஏற்றுக்கொண்டு முன்வரும் எந்தவொரு தரப்பினரையும் தங்களோடு இணைத்துக்கொள்ள கதவுகள் திறந்தே இருப்பதாக நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் கட்சியிலிருந்து சிலர் விலகிச் சென்றிருந்தாலும், புதியவர்கள் பலர் இணைந்து வருவதாகவும், அனைவரையும் ஒன்றிணைத்து நாட்டின் வலுவான அரசியல் சக்தியைக் கட்டியெழுப்புவதே தமது முதன்மைப் பொறுப்பு என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.