பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு சிறை தண்டனை!

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொஸ்கி இந்த தீர்ப்பை வழங்கினார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு பண்டாரவளை நகரில், காவல்துறை ஜீப் ஒன்று தங்களை முந்திச் சென்றமை தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுத்தமை, தடுத்துவைத்தமை மற்றும் உடல்ரீதியான தீங்கு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, சமிந்த விஜேசிறி, அவரது சாரதி பந்துல ரத்நாயக்க மற்றும் அமைச்சுப் பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி ரசிக கருணாதிலக்க ஆகியோருக்கு எதிராக குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில் முதல் இரண்டு குற்றவாளிகளான சமிந்த விஜேசிறி மற்றும் பந்துல ரத்நாயக்க ஆகியோர் நான்கு குற்றச்சாட்டுகளிலும், அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் காவல்துறை அதிகாரி மூன்று குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

எனினும் குற்றம் சாட்டப்பட்ட சாரதியான பந்துல ரத்நாயக்க உயிரிழந்துவிட்டார் என்று விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.