சாவகச்சேரி நகர சபையின் புதிய உபத் தவிசாளர் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு

சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உபதவிசாளர் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் புதிய உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுலராஜ் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தெரிவு இன்று (28) காலை நடைபெற்றது.

உள்ளூராட்சி ஆணையாளரால் விடுக்கப்பட்ட சுற்றறிக்கையை சபையில் விமர்சித்து, அதனை தூக்கி வீசியதாக சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உப தவிசாளர் ஞா.கிசோர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதிகாரியின் பரிந்துரைக்கு அமைய உப தவிசாளரது பதவியும் அவரது சபை உறுப்புரிமையும் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி ஆளுநரின் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வறிதாக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் புதிய உப தவிசாளர் தெரிவுக்காக சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சியின் சார்பிலும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி சார்பிலும் இருவர் போட்டியிட்டனர்.

அதில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டவருக்கு, தமிழரசு கட்சியின் 6 உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்தனர்.

ஜனநாயக தமிழ்தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட முத்துலிங்கம் கோகுலராஜ் என்பவருக்கு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 6 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசிய கட்சியின் ஒரு உறுப்பினரும் வாக்களித்ததுடன் தேசிய மக்கள் சக்தியின் இரு உறுப்பினர்களும் வாக்களிப்பில் ஈடுபடாமல் நடுநிலை வகித்தனர்.

இதன்போது இருவரும் சம அளவிலான வாக்குகளை பெற்றமையால் திருவுளச்சீட்டு மூலம் உப தவிசாளராக ஜனநாயக தமிழ்தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்ட முத்துலிங்கம் கோகுலராஜ் தெரிவானார்.

இதேவேளை குறித்த உப தவிசாளர் தெரிவிற்கு இடைக்கால தடை விதிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை வட மாகாண மேல் நீதிமன்றம் நிராகரித்தமை குறிப்பிடத்தக்கது.