நீதியரசர்களின் பதவிக்கால நீட்டிப்பை கைவிட வலியுறுத்தல்

நீதித்துறையின் சுயாதீனத்தில் கை வைப்பது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு முதல் படியாக அமையும். நீதியரசர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பதற்கு இரகசியமான முறையில் அரசியலமைப்பை திருத்தம் செய்வதற்கு முன்னெடுக்கும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். இந்த யோசனை நிறைவேற்றப்படுமாயின் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பதவி விலக வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணிகள் கூட்டாக வலியுறுத்தினர்.

புதிய அரசியலமைப்பை உருவாக்கவே மக்கள் ஆணை வழங்கினார்கள். அந்த வாக்குறுதியை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அதனை விடுத்து தனிப்பட்ட நோக்கத்தை முன்னிலைப்படுத்தி நீதியசர்களின் பதவிக் காலத்தை நீட்டிப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீநாத் பெரேரா, ஸ்ரீ நாத் பெரேரா மற்றும் சட்டத்தரணிகள் கூட்டாக திங்கட்கிழமை (27) கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி மேற்கண்டவாறு வலியுறுத்தினர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் குறிப்பிடுகையில்,

நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் முயற்சிகள் நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மிக மோசமான பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். நாட்டு மக்களின் ஆயுட்காலம் அதிகரித்து விட்டது, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை உயர்வடைந்து விட்டது ஆகிய காரணிகளால் நீதியரசர்களின் பதவி காலத்தை நீட்டிப்பதாக அரசாங்க தரப்பில் குறிப்பிடப்படும் காரணிகள் நடைமுறைக்கு சாத்தியமற்றது.

நீதியரசர்களின் பதவி காலம் தொடர்பில் ‘நீதித்துறையின் சுதந்திரம் என்ற பந்தியில்’ தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அரசியலமைப்புத் திருத்தம் ஊடாக இதனை மாற்றியமைக்க முயற்சிப்பது முறையற்றது. கடந்த கால அரசாங்கங்கள் தமது தனிப்பட்ட மற்றும் சந்தர்ப்பவாத நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொண்டது.

தனிப்பட்ட காரணிகளை முன்னிலைப்படுத்தி அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டதால் நாட்டின் அரச நிர்வாக கட்டமைப்பே வீழ்ச்சியடைந்தது. நீதிமன்றத்தால் பதவி நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பதவி காலத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு ‘கலவான’ திருத்தம் கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்டது.

அரசியலமைப்பின் 7,18,20 ஆகிய திருத்தங்கள் தனிப்பட்ட நலனை மாத்திரம் முன்னிலைப்படுத்தி கொண்டு வரப்பட்டது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் இரட்டை குடியுரிமை கொண்ட நபர் பாராளுமன்றத்துக்கு வர வேண்டும் என்பதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கொண்டு வரப்பட்டது. இதனால் நாட்டுக்கு ஏதும் பலன் கிடைக்கப்பெறவில்லை. அழிவே மிகுதியாகின.

நீதியரசர்களின் பதவி காலம் தொடர்பில் அரசாங்கம் எத்தரப்புடனும் விரிவான பேச்சுவார்த்தையை வெளிப்படையாக முன்னெடுக்கவில்லை. இரகசியமான நகர்வுகளே முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அரசாங்கம் எவ்வளவு காலம் பதவியில் இருக்கும் என்று எம்மால் குறிப்பிட முடியாது. அதனை மக்களே தீர்மானிக்க வேண்டும். நீதித்துறையில் ஆதிக்கம் கொள்ளும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறோம் என்றார்.