செம்மணி இனப்படுகொலையும் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரும்! : பா.அரியநேத்திரன்

யாழ்ப்பாணம் செம்மணியில் இப்போது  471க்கு மேல் , தமிழர்களின் எலும்பு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ள இந்த தமிழினப்படுகொலைகள் நடந்த ஆண்டு 1996 தொடக் கம் 1999 காலப்பகுதி என  கருதப்படுகிறது.
இந்த காலப்பகுதியில் 1994,நவம்பர்,12, தொடக்கம், 2005, நவம்பர்,19, வரை தொடர்ச்சியாக இருதடவை ஜனாதி பதியாக பதவியில் இருந்தவர் சந்திரிக்கா. பிரதமராக இருந்தவர் அவருடைய தாய் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா இவர்களுடைய ஆட்சியில்தான் 1996,செப்டம்பர்,07 அன்று யாழ்ப்பாணம் கைதடிப் பகுதியில் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிரிஷாந்தி குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினரான  கிருஷாந்தியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா (வயது 59) மாணவியின் சகோதரனும், யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி மாணவனான குமார சாமி பிரணவன் (வயது 16) மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது 35 ) ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்த வேளை அவர்கள் அனைவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்தனர்.
அந்த காலப்பகுதியில் இவர்கள் உட்பட நூற்றுக் கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதன் தொடர்சியாக யாழ்ப்பாணத்தில் தமிழின அழிப்பு படு கொலைகள் பல கிராமங்களை இராணுவம் சுற்றிவளைப்பு செய்து குடும்பம் குடும்பமாக குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் ஈவிரக்க மின்றி படுகொலை செய்தும் உயிருடனும் செம்மணியில் புதைக் கப்பட்டுள்ளனர். என்பதையே தற்போதைய எலும்புக்கூடுகள் சாட்சியங்களாக நிரூபிக்கின்றன.
இந்த இனப்படுகொலை தாயும், மகளும் அதாவது சந்திரிகா, ஶ்ரீமாவோ ஆட்சியில் நடந்த இனப்படு கொலைகளாகும். அந்த படுகொலைகளில் சில தமிழர்கள் உயிருடன் புதைக்கப்பட்டனர் என்பதற்கு சான்றாக படுகுழி யில் ஒரு தமிழர் காலை மடித்து இருந்த நிலையில் அந்த எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கொடுர இனப் படுகொலை அரங்கேறும்போது ஆட்சியில் ஜனாதிபதி யாக சந்திரிகாவும், பிரதமராக சந்திரிகாவின் தாய் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவும், பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி சந்திரிகாவே பொறுப்பு வகித்தார். அவருடன் இணைந்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக அனுருத்த ரத்வத்த செயல்பட்டார்.
இதில் முக்கிய பாத்திரமான வெளிவிவகார அமைச்சராக லக்‌ஷ்மன் கதிர்காமர் இருந்தார். சந்திரிகாவின் இனப் படுகொலைகளை மறுதலித்தும், மனித உரிமை மீறல்களை மறுதலித்தும், தமிழர்களுடை அரசியல் தீர்வை நிராகரித்தும் வெளிவிவகார அமைச்சராக ஒரு தமிழனை பயன்படுத்தி சந்திரிகா ஆட்சி வெற்றிகண்டது என்பது உண்மை.
1994, சந்திரிகா ஆட்சிக்கு பக்கபலமாக 07, ஆசனங் களை பெற்ற ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முழுமையான ஆதரவை வழங்கியது. அவர்களில் எம். எச். எம். அஷ்ரப் கப்பல்துறை, துறைமுக வளர்ச்சி, புனரமைப்பு மற்றும் புனருத்தாரண அமைச்சராகவும், றவூ ஹக்கீம் பாராளுமன்ற குழுக்களின் தலைவராகவும், ஹிஷ்புல்லா பிரதி அமைச் சராகவும் இருந்தனர்.
ஈபிடீபி டக்லஸ் தேவானந்தா தலைமையில் சுயேட்சைகுழுவில் 09, பாராளுமன்ற உறுப்பினர்கள் நிபந்தனை ஆதரவு வழங்கியதுடன் தமிழ் ஆயுத ஒட்டுக் குழுவாகவும்  இராணுவத்துடன் சேர்ந்து இயங்கினர்.
மலையகத்தை சேர்ந்த சௌமியமூர்த்தி தொண்ட மான் (இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்) கால்நடை வள அபிவிருத்தி மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராகவும்,பெ.சந்திரசேகரன் – மலையக மக்கள் முன்னணி தலைவர், பிரதி அமைச்சராகவும் இருந்தனர். மலையகத் தலைவர்களான இவர்கள் ஆட்சியில் இருந்த போதும் கிரிஷாந்தி படுகொலை, செம்மணிப்படுகொலைகளை கண்டித்தனர்.
ஆனால் ஶ்ரீலங்கா முஷ்லிம் காங்கிரஸ் அமைச் சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருமே இதனை கண்டிக்கவும் இல்லை வாய் திறக்கவும் இல்லை. ஈபிடிபி டக்லஸ் தேவானந்தா 09, ஆசனங்களுடன் நிபந்தனையற்ற ஆதரவுடன் இனப்படுகொலைக்கு துணை போனார்கள்.
1994, பொதுத்தேர்தலை பகிஷ்கரிக்குமாறு விடுத லைப்புலிகள் கட்டளை இட்டதால் தமிழர் விடுதலை கூட்டணி வடமாகாணத்தில் போட்டியிடவில்லை, கிழக்கு மாகாணத்தில் மட்டும் தமிழர் விடுதலை கூட்டணி போட்டி யிட்டமையால் மட்டக்களப்பில் மூவரும், திருகோண மலையில் ஒருவருமாக நால்வர் தெரிவானார்கள். வாக்கு கள் அடிப்படையில் தமிழர் விடுதலை கூட்டணிக்கு தேசிய பட்டியலில் ஒரு ஆசனம் கிடைத்தது அந்த ஆசனமே நீலன் திருச்செல்வத்துக்கு வழங்கப்பட்டது.
தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜோசப் பரராஜசிங்கம், பொன்னம்பலம் செல்வராசா, கிருஷ்ண பிள்ளை துரைராசசிங்கம் ஆகியோரும் திருகோணமலை மாவட்டத்தில் இருந்து அருணாசலம் தங்கத்துரை, (அவர் கரும்புலி தினமான 1997,யூலை,05 திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நிழ்வொன்றில் கலந்து கொண்ட சமயம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அந்த வெற்றிடத்திற்கு விருப்பு வாக்கு அடிப்படையில் அடுத்த நிலை இரா சம்பந்தன் நியமனம் பெற்றார்) தேசியபட்டியலில்  யாழ்ப்பாணம் நீலன் திருச்செல்வத்துக்கு வழங்கப்பட்டது.  (அவர் 1999, யூலை,29, ல் தற்கொலை குண்டுதாரியால் கொல்லப்பட்டார். அந்த வெற்றிடத்திற்கு மாவை சேனாதிராசா நியமனமானார்.
1996,ல் செம்மணியில் மாணவி கிரிசாந்தி படு கொலை இடம்பெற்ற போதும் அதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் அத்துமீறல்கள், சுற்றிவளைப்புகள், இனப்படுகொலைகள் என அரங்கேறிய காலத்தில் தமிழர் விடுதலைக்கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் வன்மையாகக் கண்டித்து குரல் கொடுத் ததனர். இப்படுகொலைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரிய விசாரணை நடத்தவும், பாதுகாப்புப் படையினரின் அடக்குமுறைகளைக் கட்டுப்படுத்தவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
1997,ம் ஆண்டில் யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகுழிகள் மற்றும் காணாமல் போனோர் விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் வெளிநாடுகளுக்கும் கொண்டு சென்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் குரல் கொடுத்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கைதுகள், படுகொலைகள் மற்றும் இரகசியப் புதைகுழிகள் குறித்த தகவல்களை அப்போதைய நாடாளுமன்றத்தில் அவர் கேள்வி எழுப்பி அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.  சர்வதேச நாடுகளிலும் செம்மணியில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து  சர்வதேச ஊடகங் களுக்கும் தெரியப்படுத்தினார்.
ஆனால் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் கிரிஷாந்தி குமாரசாமி மற்றும் செம்மணி படுகொலைகள் தொடர்பான நீதி விசாரணைகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் சட்டத்தின்படி சுதந்திரமாக நடப்பதாகவும், குற்றங்களை இழைத்தவர்கள் எந்தத் தரப்பினராக இருந்தாலும் தப்ப முடியாது இலங்கை நீதித்துறை தனது கடமையைச் சரியாகச் செய்கிறது. மனித உரிமை மீறல்கள் குறித்து வெளிப்படையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என வழமையான வாய்பாடுகளை சர்வதேச சமூகத்திற்கும் ஊடகங்களுக்கும் தெரிவித்ததுடன் பல சர்வதே நாடுகளிலும் வெளிநாட்டு தூதரகங்களிலும் ஜனாதிபதி சந்திரிகா, பிரதமர் ஶ்ரீமாவோ ஆட்சியை காப்பாற்றி இனப்படுகொலைகளை மறுதலிக்கும் செயல்பாடுகளையே செய்தார்.
1994, ல் லக்ஷ்மன் கதிர்காமர் ஆரம்பித்த துரோகச் செயல்கள் 2005, வரை 11, வருடங்களாக தொடர்ந்தன என்பதே வரலாறு.  பல அழுத்தம் காரணமாக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கு  கொழும்பு மேல்நீதிமன்றம் / ட்ரயல்-அட்-பார் அமர்வு இடம்பெற்று குற்றவாளிகளுக்கு 1998,யூலை,07, ல் மரண தண்டனை விதித்தது. குற்றவாளிகளான முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச உள்ளிட்ட குற்றவாளி களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் முதன் முதலில் தகவல் வழங்கியவர்  லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்­ஷ. மாணவி கிருஷாந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற பின்னர் தெரிந்த உண்மை.
யாழ்ப்பாணம் செம்மணியில் மனிதப் புதைகுழி உண்டு என அவர் தெரிவித்ததன் காரணமாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, 1999,யூன்,16, அன்று அவர் செம்மணிக்கு அழைத்து வரப்பட்டார். அவரால் அடையாளம் காட்டப்பட்ட இடங்களில் மனித புதைகுழிகள் தென்படவில்லை.
இதனால் சோமரத்ன ராஜபக்ஷ­வின் தகவல்கள் குறித்த கவனம் பெரிதுபடவில்லை. ஆயினும் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தின் கட்டுமானப் பணியின் பொருட்டு அங்கு 2025,யூன் மாதம் அத்திவாரம் வெட்டப்பட்ட போது, என்புக் கூடுகள் வெளிவந்ததையடுத்து அத்திவாரம் வெட்டும் பணி இடைநிறுத்தப்பட்டு குறித்த விவகாரம் பொலிஸ் ஊடாக நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு வரப்பட்டது.
இச்சம்பவம் நடந்த போது, இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அநுர குமார திஸாநாயக்க தலை மையிலான தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அமையப்பெற்றிருந்தது. அதன் பின்னர் 2025, யூலை, 21 நீதிமன்றத்தின் உத்தரவில் அங்கு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்கான நிதியை அரசாங்கம் ஒதுக்கியிருந்தது.
மேற்படி அகழ்வுப் பணிகளின் ஒருவருடம் எட்டும் போது கடந்த 2026, யூலை,23, வரை 471 என்புத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. மேலும் பல என்புத்தொகுதிகள் உண்டு என அதிர்ச்சியில் நம் மக்கள் உறைந்திருக்கும் வேளையில், செம்மணி பகுதியில் மேலும் சில இடங்களில் மனிதப் புதைகுழிகள் இருப்பதாக சோமரத்ன ராஜபக்ஷ ­தற்போது கூறியிருப்பது பேரதிர்ச்சியைத் தருவதாகும்.
இந்த நிலையில் கடந்த 22/07/2026, ல் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினர் செம்மணி தமிழினப்படுகொலை என்புத்தொகுதிகளை பார்வையிட்டுள்ளனர்.