அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து கடல்சார் பாதுகாப்பு பயிற்சி!

அமெரிக்காவும் இலங்கையும் இணைந்து, கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடர் மீட்புப் பணிகள் மற்றும் இந்து சமுத்திரத்தினை மேலும் பாதுகாப்பானதாக மாற்றுதல் ஆகியவற்றுக்கு உதவியாக, தமது கடற்படைகள் ஒன்றிணைந்து பணியாற்றும் திறனை பலப்படுத்தும் ஒரு இருதரப்பு கடல்சார் பயிற்சியான Cooperation Afloat Readiness and Training (CARAT) பயிற்சியினை ஜூலை 26ஆம் திகதி ஆரம்பித்தன.

இலங்கைக் கடற்படையின் ஏற்பாட்டில் ஜூலை 27ஆம் திகதி முதல் ஜூலை 31ஆம் திகதி வரை திருகோணமலையிலும் கொழும்பிலும் நடைபெறும் CARAT Sri Lanka 2026 பயிற்சியானது, கடல்சார் ஒத்துழைப்பைப் பலப்படுத்தி, பொதுவான சவால்களுக்கு ஒன்றிணைந்து பதிலளிப்பதற்கு எமது படைகளைத் தயார்படுத்தும் ஒரு வாரகால தரை மற்றும் கடல்சார் பயிற்சிகளுக்காக, அமெரிக்க கடற்படை, அமெரிக்க கடலோர காவற்படை, இலங்கை விமானப்படை மற்றும் இலங்கை கடற்படை ஆகியவற்றைச் சேர்ந்த வீரர்களை ஒன்றிணைக்கிறது.

“இலங்கையுடனான எமது பாதுகாப்புப் பங்காண்மைக்கான அமெரிக்காவின் நீடித்த உறுதிப்பாட்டினை இப்பயிற்சி பிரதிபலிக்கிறது” என இலங்கைக்கான பாதுகாப்பு இராஜதந்திர அலுவலரும், அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியுமான லெப்.கேணல் மெத்திவ் ஹவ்ஸ் கூறியுள்ளார்.