வடக்கு, கிழக்கு நிலப்பரப்பு முழுவதும் பரந்து காணப்படும் மனிதப்புதைகுழிகள் வெறும் தொல் பொருள் அகழ்வாராய்ச்சித் தளங்கள் அல்ல. அவை தமிழ் இனப்படுகொலையின் பேரழிவையும், தசாப்த காலமாக தொடரும் கட்டமைக்கப்பட்ட வலிந்து காணாமலாக்கப் படுதல்களையும் சாட்சியப்படுத்தும் குற்றவியல் களங்களா கும்.
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் 2025 பெப்ர வரி முதல் மீண்டும் முன்னெடுக்கப்படும் அகழ் வாராய்ச்சிப் பணிகளில் இதுவரை 471க்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டறியப்பட்டு, அதில் 455 எலும்புக்கூடுகள் நீதி மன்ற மேற்பார்வையின் கீழ் மீட்கப்பட்டுள்ளன.
இவற்றுள் பெரும்பாலான எலும்புக்கூடுகள் உடைகளில்லாத நிலையிலும், குழந்தைகள் மற்றும் கைக் குழந்தைகளின் எச்சங்களாகவும் கண்டெடுக்கப்பட்டுள் ளன. தோண்டி எடுக்கப்பட்ட மனித எச்சங்களில் பத்தில் ஒரு பங்கு சிறார்களின் எலும்புக்கூடுகள் என்பது முதற் கட்ட தடயவியல் ஆய்வுகளில் தெரியவந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களுடன் மீட்கப்பட்ட பாடசாலைப் பைகள், சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்கள், பால் போத்தல் கள், ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவை கொலையுண்டவர்களின் சிவிலியன் தன்மையை ஐயமற வெளிப்படுத்துகின்றன.
இத்தகைய பேரதிர்ச்சி தரும் சான்றுகள் தொடர்ந்து வெளிவந்தபோதிலும், இலங்கை அரசானது சர்வதேச தடயவியல் நிபுணர்களின் பங்கேற்பையோ, வெளிப்படையான மரபனு பரிசோதனை முறைகளையோ அல்லது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நம்பக்கூடிய ஒரு பொறிமுறையையோ முற்றாக நிராகரித்தே வருகின்றது.
இத்தகைய பின்னணியில், ஐரோப்பிய ஒன்றியத் தின் இலங்கைக்கான தூதுவர் கார்மென் மொரேனோ தலைமையில் ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள் அடங்கிய உயர்மட்டத் தூதுக்குழுவினர் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தின் பூர்வாங்க அனுமதியுடன் செம்மணி மனிதப்புதைகுழி அகழாய்வுத் தளத்திற்கு அவசர விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள நீதிபதி, சட்டவைத்திய அதிகாரி மற்றும் வழக்கறிஞர்களுடன் கலந்துரையாடினர்.
ஐரோப்பிய ஒன்றியக் குழுவினரின் இந்த வரு கைக்கு சமாந்தரமாக, வடக்கு கிழக்கு மாகாண காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து கண்டி–யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கவனயீர்ப்புப் போராட் டத்தை முன்னெடுத்தனர்.
செம்மணி உட்பட இலங்கையில் கண்டறியப்பட்ட அனைத்து மனிதப்புதைகுழிகளுக்கும் சர்வதேச நீதிப் பொறிமுறையூடாக சுயாதீன விசாரணைகள் முன் னெடுக்கப்பட வேண்டும் என்றும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு உண்மை, நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் மீள நிகழாமைக்கான உத்தரவாதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியதுடன், இலங்கையின் உள்நாட்டு நீதிப் பொறிமுறையை முற்றிலும் நிராகரிப்பதாகவும் பிரகடனம் செய்தனர்.
போராட்ட களத்தில் நிலவிய கடுமையான பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்களின் கண்காணிப்பையும் அச்சுறுத்தல்களையும் தாண்டி, பாதிக்கப்பட்ட மக்களின் சார்பில் வட, கிழக்கு மாகாண காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத் தலைவர் கனகரஞ்சினி தலைமை யிலான பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவை சந்தித்து 12 பக்கங்களைக் கொண்ட சர்வதேச மனுவை கையளித்தனர்.
‘நாங்கள் தந்த மகஜர் வெறும் காகிதம் அல்ல. எங்களுடைய உயிரையே உங்களுடைய கைகளில் ஒப்படைத்திருக்கின்றோம்’ என்று பாதிக்கப்பட்ட தாய்மார்கள் உருக்கமாகத் தெரிவித்தபோதிலும், தூதுக்குழுவினரோ ‘நீங்கள் தந்தது வெறும் காகிதம் அல்ல என்பதை அறிவோம், ஆனால் எம்மால் உங்களுக்கு எந்த உறுதிமொழியும் தர முடியாது. உங்களின் துன்ப துயரங்களை ஐ.நா.சபையிலும் மனித உரிமைகளைப் பேணும் நாடுகளிடமும் வேண்டுமானால் எடுத்துக்கூறுவோம்’ எனக் கூறி தங்களது பொறுப்பை சாதுரியமாகக் கைவிரித்தனர்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சர்வதேச விசார ணையை மட்டுமே உறுதியாகக் கோருவதற்குப் பின்னால் நியாயமான வரலாற்று காரணங்கள் உள்ளன. ஏனெனில் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் நீதிக்காகப் போராடிய 450 க்கும் மேற்பட்ட பெற்றோர் பலனின்றி மரணித்துப் போயுள்ளனர்.
கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட பல உள்நாட்டு ஆணைக்குழுக்களும், அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ‘காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகம்’ மற்றும் ‘இழப்பீடுகளுக்கான அலுவலகம்’ போன்ற கட்டமைப்புக ளும் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெறத் தவறியதோடு, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் கேடய மாகவே செயற்பட்டு வருகின்றன.
இதனாலேயே தமிழ் மக்கள் செம்மணி உட்பட அனைத்துப் புதைகுழிகளுக்கும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் அல்லது சுயாதீன சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடு ஒன்றில் சர்வதேச கண்காணிப்புடன் கூடிய ‘மரபனு தரவு வங்கி’ உருவாக்கப்பட்டு புலம்பெயர் தமிழ் மக்களையும் உள்ளடக் கிய வகையில் மாதிரிகள் ஒப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும், செயற்கைக்கோள் புகைப்படங்கள் மற்றும் நிலவரைபட நுட்பங்களைப் பயன்படுத்தி படுகொலைத் தளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் கோருகின்றனர்.
இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த திடீர் விஜயமானது பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான போராட்டத்தை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, சர்வதேச சமூகத்தின் கவனத்தைத் திசைதிருப்பும் நாடகமாகவே பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசுக்கு வழங்கப்படும் ஜி.எஸ்.பி. பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகையைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச அளவில் எழும் அழுத்தங்களைக் குறைப்பதற்குமான கருவியாகவே இந்த விஜயத்தை கருதவேண்டியுள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் முற்றாக நிரா கரித்த ‘காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலக’ அதிகாரி களையும், அரசு சார்ந்த கட்டமைப்புகளையும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் செம்மணி விஜயத்துக்கு பின்னர் சந்தித்து உரையாடியிருப்பது, உறவுகளைப் பறி கொடுத்த மக்கள் நிராகரித்த அதே பலனற்ற உள்ளகக் கட்டமைப்புக்குள் அவர்களை மீண்டும் திணிப்பதற்கான சூழ்ச்சியையே காட்டுகிறது.
மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடரும் ஒரு நாட்டிற்கு, பொருளாதாரச் சலுகைகளை நிபந்தனையின்றி நீடிப்பதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியம் குற்றமிழைத்த அரசுக்குத் துணைபோகிறது என்பது பகிரங்கமாகின்றது.
அதேவேளை, வடக்கு, கிழக்கு முழுவதும் மக்கள் தன்னிச்சையாக திரண்டு போராடியபோதிலும், தமிழ் அரசியல் கட்சிகளின் ஒருங்கிணைந்த பிரதிநிதித்துவமும் தெளிவான அரசியல் மூலோபாயமும் சர்வதேச தூதுக் குழுவின் முன் வலுவாக வைக்கப்படாமல் தமிழர் தாயகம் ஒரு தேசமாக எழுந்து நின்று சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கத் தவறியமையும் இத்தகைய சர்வதேச பிரதிநிதிகள் மிக இலகுவாக கடந்து செல்வதற்கு வழிவகுத்துள்ளது.
சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின் கீழ் மனிதப் புதைகுழிகள் என்பவை போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கான சாட்சியங்களாகும். செம்மணியிலும் ஏனைய இடங்களிலும் தோண்டத் தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியின் மௌன சாட்சிகளாக இருக்கும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவின் ‘உறுதிமொழி தர முடியாது’ என்ற பதில் சர்வதேச சமூகத்தின் மெத்தனப்போக்கை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.
வெறும் அறிக்கைகளுடனும், திசைதிருப்பும் விஜயங்களுடனும் இந்த விவகாரத்தைக் கடந்து செல் லாமல், இலங்கை அரசுக்கு பொருளாதார-அரசியல் அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலமும், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அறிக்கையாளர் மற்றும் சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையை அமைப்பதன் மூலமும் மட்டுமே உண்மையான நீதியை சாத்தியப்படுத்த முடியும்.
பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான போராட்டம் என்பது வெறும் இழப்பீட்டுக்கானது அல்ல. அது அவர்களின் இறையாண்மை, மனித கண்ணியம் மற்றும் வரலாற்று உண்மைக்கான போராட்டமாகும். ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற சர்வதேச சமூகங்கள் பூசிமெழுகி தங்களது இராஜதந்திர மூலோபாயத்தை நகர்த்த முனைவதானது, தென்னிலங்கை அரசுகளின் பொறுப்புக்கூறலிலிருந்து நழுவிச்செல்லும் போக்கிற்கு துணைபோவதாக மட்டுமே தான் இருக்க முடியும். அவ்விதமான நிலையில் சர்வதேசம் வழங்கப்போகும் நீதி என்ன என்பதை மீளாய்வதற்கு செய்வது தாயகத்தின் அத்தனை தரப்புக்களின் முன் னாலிருக்கும் பெருங்கடமையாகின்றது.



