மலையகக் காணி உரிமை பற்றிய அனுர அரசின் நிலைப்பாடு என்ன?

பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் மலையகத் தமிழர்களின் காணி உரிமை தொடர்பில் தற்போதைய அரசு தனது உண்மையான கொள்கையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்தினார்.
மலையக மக்களின் காணி உரிமை குறித்து பாராளு மன்றத்தில் விமர்சனத்தை முன்வைத்த அவர், “எங்கள் மக்கள் ‘தேவ தூதர்கள் வந்துவிட்டார்கள்’ என நம்பி இந்த அரசுக்கு வாக்களித்தனர் என்று சாடினார்.
அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், “ஹட்டன் பிரகட னத்தில் காணி உரிமை குறித்துக் கூறி வாக்குகளைப் பெற்ற அரசு, தற்போது அது குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன்? இது தொடர்பில் தமக்கான கொள்கையை வெளிப்படையாகவும், வார்த்தை ஜாலங்கள் இல்லாமலும் அரசு அறிவிக்க வேண்டும்.” என்றும் அவர் வலியுறுத்தினார்.
“நாம் கோருவது, களியாட்ட விடுதிகளை கட்ட அல்லது, ஆடம்பர பண்ணை வீடுகளை கட்ட ஏக்கர் கணக்கில் காணி அல்ல. தம் 200 ஆண்டுகால உழைப்பினால், வெளிநாட்டு வருமானம் கொட்டும், பெருந்தோட்டங்களை உருவாக்கிய மக்களும் அவர்களது பரம்பரையினரும், இன்று பெருந்தோட்ட பிரதேசங்களில் தோட்ட தொழிலாளர்களாகவும் வேறு தொழில் முயற்சியாளர்களாவும், வாழ்கிறார்கள். அவர்களுக்கு வதிவிட மற்றும் வாழ்வாதார காணி துண்டுகள், அவசியம் என்பதே, தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கை ஆகும்”.
“லயன் குடியிருப்புகளை தவிர்த்து, மலையக மக்கள் வாழும் காணிகள் சட்ட விரோதமானவை” என அரசாங்கம் நினைக்கிறதா? “நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை. தமது மன்றில் முன்வைக்கப்படும், சட்ட ஆவணங்களை வைத்தே நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குகின்றன.  அதேபோல், பெருந்தோட்ட நிறுவனங்கள் குண்டர் படையை வைத்து, அத்து மீறிய குடியேற்றங்கள் என மலையக மக்கள் வாழும் குடிசை குடியிருப்புகளை உடைக்கின்றன”.
“இவை பற்றி தமக்கு எதுவுமே தெரியாது என்பதை போன்று, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அமைச்சர் சமந்த வித்தியாரத்ன முதல் அரசில் மலையகத்தை பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக்கொள்ளும் அனைவரும் இனிமேலும் நாடகம் நடிக்க கூடாது”. “பெருந்தோட்டக் காணிகள் அரசுக்குச் சொந்தமானவை என்றும், நிறுவனங்கள் வெறும் குத்தகைதாரர்கள் மட்டுமே என்றும் சுட்டிக்காட்டிய அவர், தோட்டங்களில் மக்கள் மேற்கொள்ளும் கட்டுமானங்களை ‘அத்துமீறியவை’ எனக் கூறித் தடுப்பதற்கும், உடைப்பதற்கும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு அரச நிறு வனங்களே அனுமதி வழங்குகின்றன” என்று பாராளுமன்ற உறுப்பி னர் மனோ கணேசன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
குறிப்பாக, பெருந்தோட்ட அமைச்சின் கீழ் உள்ள கண்காணிப்புப் பிரிவு மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாடுகள் குறித்தும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
குறிப்பாக, மலையக மக்களின் காணி உரிமை தொடர்பான அரசின் நிலைப்பாட்டை உடனடியாகப் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், அரசின் காணி உரிமை கொள்கை வரையறுக்கப்படும் வரை, வீடில்லா மக்கள் மேற்கொள்ளும் கட்டுமானங்களை ‘அத்துமீறியவை’ எனக் கூறி வழக்குத் தொடர்வதையோ அல்லது அவற்றை உடைத்து அகற்றுவதையோ உடனடியாக இடைநிறுத்த வேண்டும் என்றும் மனோ கணேசன்  வலியுறுத்தினார்.
200 ஆண்டுகாலப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை நோக்கிய அந்தப் பயணத்தை, இந்த அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.