இனப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் ஊடாக தீர்வு எட்டப்பட வேண்டும் : இந்திய காங்கிரஸ் கட்சி

இலங்கையில் தேசிய இனப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக புரிந்துணர்வின் அடிப்படையில் செயற்பட வேண்டும் என்று இந்திய காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் தெரிவித்தார்.

“இலங்கையின் வரலாற்றில் தேவையற்ற கொடூரமான வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவை துயரம் தோய்ந்த கதைகளாகும். மீண்டும் அவ்விதமானதொரு சூழலுக்குள் இலங்கை மக்கள் வாழக்கூடாது. ஆகவே அரசாங்கம் தனது மக்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து தீர்வுகளை வழங்குவதே ஜனநாயகத்தின் அடிப்படையாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு வெளியக ஆலோசனைகள் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றுக்காக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சசி தரூர், தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

“என்னைப்பொறுத்தவரையில் இந்தியராகவோ அல்லது இந்திய அரசாங்கமோ இந்த விடயத்தில் ஆலோசனையை வழங்க முடியும் என்றல்ல. இலங்கை அரசாங்கம் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மறந்து விடக்கூடாது”.

“ஆனால் இந்திய, இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட சூழ்நிலை தற்போது இல்லை. நாங்கள் இலங்கையின் இறையாண்மையை மதிக்கின்றோம். ஆகவே அவர்களுக்கு வெளியக ஆலோசனைகள் அவசியமில்லை”.

“இந்திய அரசாங்கமாக இருக்கலாம், இலங்கை அரசாங்கமாக இருக்கலாம், இனரீதியான, மதரீதியான, மொழி ரீதியான அல்லது தனியொரு குழு ரீதியாக விடயங்கள் கூர்ப்படைகின்ற போது அவ்விதமான சூழ்நிலைகளை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

உணர்வுகளை மதிக்க வேண்டும். உரையாடல்கள், கூட்டுறவுகள், இருதரப்பு புரிந்துணர்வு ஆகியவை தான் இங்கு தீர்வாக உள்ளன” என்று இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வரலாற்றில் எண்பதுகளில், தொண்ணூறுகளில் தேவையற்ற கொடூரமான வன்முறைகள் நிகழ்ந்துள்ளன.

துரதிஷ்டமாக அவ்விதமான நிகழ்வுகள் நிகழ்ந்தேறிவிட்டன. ஆனால் அவ்விதமான நிகழ்வுகள் மீள நிகழாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஜனநாயக ஆட்சிக்கு உட்பட்டவாறு அவை இடம்பெற வேண்டும்.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமான ஜனநாயக நிலைமையே காணப்படுகின்றது. குறிப்பாக பாராளுமன்ற ஜனநாயகம் உட்பட மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படும் முறைமையானது ஆரோக்கியமானதாகவே உள்ளது

இலங்கையில் வாழ்பவர்கள் தமிழர்களாக, சிங்களவர்களாக, இஸ்லாமியர்களாக இருக்கலாம். அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள். அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும்.

அது தான் ஜனநாயகத்தின் அடிப்படையாகும். பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வினை காண முடியும். பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது தான் அவசியமானது என்றும்‌ இந்திய காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் தெரிவித்தார்.