நீர்கொழும்பு சிறையில் குற்றம் நிகழ்ந்துள்ளதாக அறிவிப்பு

நீர்கொழும்பு சிறைச்சாலைக்குள் அண்மையில் ஏற்பட்ட கலவரத்தின் போது குற்றம் ஒன்று இழைக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பில் விசாரணை நடத்தி சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீர்கொழும்பு நீதவான் ஷிலானி பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நேற்று (23) உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இச்சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் மரணத்திற்கான காரணங்கள் அறிவிக்கப்பட்ட 28 பேரில் 17 பேர் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்களினாலும், 11 பேர் மழுங்கிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட பன்முகக் காயங்களினாலும் உயிரிழந்துள்ளதாக நீதவான் அறிவித்தார்.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 05 மற்றும் 06 ஆகிய இரு தினங்களில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கு நீர்கொழும்பு நீதவான் ஷிலானி பெரேரா முன்னிலையில்  மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றங்கள் அடங்கிய மேலதிக அறிக்கையைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்தது. இந்த  விசாரணையின் போது நீத வான் மேற்குறிப்பிட்டவாறு அறிவித்துள்ளார்.