சவுதி அரேபியாவின் எண்ணெய் கப்பல்கள் மீது ஹவுத்திகள் தாக்குதல்!

சவுதி அரேபியா மீதான கடல்வழி முற்றுகையின் ஒரு பகுதியாக இரண்டு சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி  போராளிகள் வியாழக்கிழமை (23) தெரிவித்தனர்.

ஹார்முஸ் நீரிணையைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ஈரான் மேற்கொள்ளும் முயற்சிக்கு இணையாக, செங்கடல் பகுதியில் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் மீது இரண்டாவது முக்கிய முடக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் ஈரான் மீது புதிய சுற்றுத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் புதன்கிழமை (22) தெரிவித்தது.

இந்த நடவடிக்கையின் மூலம் அமெரிக்காவின் தாக்குதல்கள் தொடர்ந்து 12 ஆவது இரவாக நீடித்தன.

ஹார்முஸ் நீரிணைக்கு அரேபிய தீபகற்பத்தின் மறுமுனையில் அமைந்துள்ள பாப் அல்-மண்டேப் நீரிணைக்கு அருகிலுள்ள பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள யேமன் நாட்டுத்  போராளிகள், சவுதி அரேபியா மீது கடற்படை முற்றுகையை விதிப்பதாக திங்களன்று அறிவித்தனர்.

இது ஈரானின் செல்வாக்கை அல்லது பேரம் பேசும் திறனை வலுப்படுத்துவதற்கான ஒரு தந்திரோபாய நடவடிக்கையாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

செங்கடலில் கப்பல் போக்குவரத்திற்கு மீண்டும் அச்சுறுத்தல்கள் எழுவதற்கு முன்பே, ஹார்முஸ் நீரிணையை ஈரான் ஏறக்குறைய முழுமையாக முடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.