திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில், புத்த விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் அரசின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று முன் தினம் (21) தமிழ் அரசியல் மற்றும் சமூக அமைப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
திருகோணமலை பிரதேச தொல்பொருளியல் காரியாலயத்தின் ஏற்பாட்டில், கன்னியா வெந்நீரூற்று தொல்பொருள் வளாகத்தில் உள்ள தூபி பாதுகாக்கும் நடவடிக்கைக்கான ஆரம்ப விழாவில் மாவட்ட அரசாங்க அதிபர், திருகோணமலை பிரதேச தொல்பொருளியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் சுரங்க பெரேரா மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர் .
இந்தநிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி புதிய கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக அரசுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மேல்நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கில் வழங்கப்பட்ட உத்தரவின்படி, கன்னியா வெந்நீரூற்று பகுதியில் புதிய கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளக் கூடாது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அந்த உத்தரவை மீறி, புராதன பிள்ளையார் ஆலய இடிபாடுகள் காணப்படும் பகுதியில் பெளத்த விகாரை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது
தமிழர்களுக்கும் குறிப்பாக இந்து மக்களுக்கும் மத, வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படுகின்ற நிலையில் தற்போது அங்கு எழுப்பப்படவுள்ள பௌத்த விகாரைத்தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்தநிலையில், விகாரைக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை தொடர்பாக, கன்னியா பகுதியின் வரலாற்று மற்றும் தொல்லியல் அடையாளங்கள் திரிபுபடுத்தப்படுகின்றன என்றும், தமிழர்களின் பாரம்பரிய மத மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் பாதிக்கப்படுகின்றன என்றும் சில சமூக அமைப்புகளும் உள்ளூர் மக்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.



