குட்டிமணி, தங்கத்துரையின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக காவல்துறை விசாரணை

வெலிக்கடை சிறை கலவரத்தின் போது படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கத்துரை ஆகியோரின் உருவச்சிலை திறப்பு விழா தொடர்பாக வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் தங்கத்துரை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் செயலதிபர் குட்டிமணி ஆகியோரின் உருவச்சிலை எதிர்வரும் 25ம் திகதி வல்வெட்டித்துறையில் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏற்பாட்டு குழுவின் சார்பில் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சதீஸ் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை வன்முறை சம்பவங்களின் உச்ச கட்டமாக வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகள் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.