“தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின் இணைவு ஒரு அரசியல் மேடை மாத்திரமே” : மனோ அறிவிப்பு

தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ளது ஒரு அரசியல் மேடை என்றும் அது கூட்டணி அல்ல என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

“ஐக்கிய மக்கள் சக்தியில் நாங்கள் இணைந்து செயலாற்றவில்லை. ஐக்கிய மக்கள் முன்னணியிலேயே நாங்கள் செயலாற்றி வருகிறோம். தமிழ் முஸ்லிம் கட்சிகளின் இணைவு கூட்டணியல்ல. அதுவொரு பொது மேடை’’ என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இடம்பெறும் சந்தேகத்துக்கிடமான மரணங்கள் குறித்து ஆராய்ந்து உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் புரிந்துணர்வின் அடிப்படையிலேயே ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் எங்களால் சுயாதீனமாக செயற்பட முடியும். ஐக்கிய மக்கள் கூட்டணியில் இருக்கவும் முடியும். வெளியேறவும் முடியும். ஆனால் நாங்கள் தொடர்ந்து கூட்டணியில் இருக்கிறோம். அதே நேரம் புதிய இணைவு தீர்வுகளுக்கான புதிய மேடை மாத்திரமே” என்றும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் அடிப்படைவாதிகள் சிலரும் சிங்கள அடிப்படைவாதிகள் சிலரும் வேண்டுமென்றே தவறாக புரிந்துகொண்டு மக்களுக்கு கூற முயற்சிக்கிறார்கள்.

மக்களை காட்டிக்கொடுத்து விட்டதாகவும் இனவாதம் செய்வதாகவும் கூறுகிறார்கள். தங்களுக்கு மத்தியில் இனவாதம் இல்லை என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.