திருமலை மீனவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர் சமூகத்தினர், நீண்டகாலமாகத் தமக்கு நிலவி வரும் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை மாவட்டக் காரியாலயத்தில் இன்று (20) காலை குறித்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருகோணமலை பகுதியில் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை ஒடுக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிராகவே இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மனுவைக் கையளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அந்த மக்கள், ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் திருகோணமலை கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்த ரத்ன கமகே, மீன்பிடி பிரதி அமைச்சராகப் பதவியேற்ற போதிலும், திருகோணமலைப் பக்கமே தலைவைத்துப் பார்ப்பதில்லை என்று குற்றம் சுமத்தினர்.

பல வருட காலமாக தாங்கள் எதிர்கொண்டு வரும் பல்வேறு குறைபாடுகள் குறித்து திருகோணமலை மாவட்ட அரசியல் தலைமைகள் நன்கு அறிந்திருந்தும், அவை தொடர்பாக எவ்வித சாதகமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் அந்த மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகள் குறித்துப் பேசுவதற்கு தாங்கள் முற்படும் போதெல்லாம், ‘உங்களது பிரச்சினைகள் பற்றி எமக்கு நன்கு தெரியும்’ எனக் கூறி அரசியல் தலைமைகள் தங்களை அமரச்செய்து விடுகின்றனர் என்றும் திருகோணமலையைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த விடயம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொண்டு, தங்களுக்கான நீதியையும் வாழ்வாதாரப் பாதுகாப்பையும் பெற்றுத்தர வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.