இலங்கையில் இடம்பெறும் மரணங்கள் குறித்து சர்வதேச விசாரணை வேண்டும் : மொட்டு கட்சி

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு இடம்பெற்றுள்ள மர்ம மரணங்கள் தொடர்பில் முறையான சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பது பொருத்தமாக இருக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். ”323 கொள்கலன் விவகாரம் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவித்த டேன் பிரியசாத் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

எயார் பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் அதிகாரியும் மரணித்தார். 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பான விவகாரத்தில் ரங்க நிஷாந்த ராஜபக்ஷ என்ற திறைசேரி அதிகாரி, உயிரிழந்தமை தொடர்பில் பலத்த சந்தேகங்கள் நிலவுகின்றன.

தற்போது, முன்னாள் காவல்துறைமா அதிபர் உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது, இதில் எதுவுமே புரியாமல் உள்ளது” என்று அவர் குறிப்பிட்டார். இவற்றை உயிர்மாய்ப்பு சம்பவங்கள் என்று மறந்துவிட முடியாது என குறிப்பிட்ட அவர் இவற்றில் சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவித்தார்.

இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் உண்மையை வெளிக்கொணர உள்நாட்டு விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கத்துக்குத் திறனோ அல்லது வலிமையோ இல்லையெனில், FBI போன்ற சர்வதேச விசாரணை அமைப்புகளின் உதவியைப் பெற்று விசாரணைகளை நடத்த வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த வலியுறுத்தியுள்ளார்.