யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வின் மூன்றாம் கட்டத்தின் 37ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று(19) யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டன.
இந்த அகழ்வின்போது மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் சுத்தம் செய்யப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், மூன்று கட்ட அகழ்வுகளிலும் இதுவரை மொத்தம் 446 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 434 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், 429ஆம் இலக்க மனித எலும்புக்கூடு கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோன்ற நிலையில் புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழ்வின் போதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால், செம்மணி மனித புதைகுழி அகழ்வில் கால்கள் மடக்கப்பட்ட அமர்ந்த நிலையில் புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு அடையாளம் காணப்படுவது இது இரண்டாவது சந்தர்ப்பமாகும்.



