திருகோணமலை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எம்.பி. இம்ரான் மஹ்ரூப் வைத்த முன்மொழிவுகள்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை (16) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்  முன்வைத்த முன்மொழிவுகள்…..

கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன்வைத்த திருகோணமலை மாவட்டத்தில் சமிஞ்சை விளக்குகள் (Traffic colour lights)  பொறுத்துவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்த அவர்

1. கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு வரையான கரையோரம் மிகவேகமாக கடலரிப்பினால் பாதிப்படைந்து வருகின்றது, இதில் தோணா பிரதேசத்திலிருந்து உப்பாறு வரை தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள வீதியினானது 3 வது வீதியாகும், இதற்கு முன்னர் இரண்டு வீதிகள் கடலரிப்பினால் சேதமடைந்து கடலுக்குள் சென்றுள்ளது. இந்த வீதியும் சேதமடைவதற்கு முன்னர் கிண்ணியா பாலத்திலிருந்து உப்பாறு பாலம் வரையும் கடலரிப்பினை தடுப்பதற்கான தடுப்புச் சுவரினை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

02.கிண்ணியா சூரங்கல் பிரதான வீதியில் இரண்டு தனிநபர்களுக்கும், பள்ளிவாயலொன்றுக்கும் சொந்தமான 4 ஏக்கர் காணியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இக்காணிக்கு முன்னர் வாடகை செலுத்தப்பட்ட போதிலும் 2014 ஆம் ஆண்டு இராணுவ முகாமுக்காக சுவீகரிப்பதாக வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் வாடகையும் செலுத்தப்படுவதில்லை. வர்த்தமானியினை இரத்துச் செய்து அந்தக் காணி உரிமையாளர்களுக்கு அந்தக்காணியினை திருப்பிக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அதற்குப் பதிலாக பொருத்தமான மாற்றுக்காணியினை வழங்குவதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

3. நீண்டகாலமாக முத்துநகர் கிராமத்தில் குடியிருந்த பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்களுக்கு குடியிருப்பதற்காக வேறு இடங்களில் காணியினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

04.கந்தளாய் பிரதேச செயலக பிரிவின் ஜெயந்திபுர கிராம சேவகர் பிரிவில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால்  விவசாய நோக்கத்திற்காக காணி வழங்கப்பட்ட 58 பேருக்கு கடந்த சில வருடங்களாக வரி செலுத்தவில்லை எனக் கூறப்பட்டு குறிப்பிட்ட வருடங்களுக்கான வட்டி மற்றும் வரி என்பவற்றினை இம்மாத இறுதிக்குள் செலுத்துமாறு கந்தளாய் உதவி காணி ஆணையாளரினால் கடிதம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியிலுள்ள குறிப்பிட்ட விவசாயிகள் பாரிய நெருக்கடி நிலைக்கு முகம்கொடுத்துள்ளனர்.

எனவே, இந்த விவசாயிகளுக்கு குறிப்பிட்ட கட்டணத்தினை செலுத்துவதற்கான காலத்தினை நீடித்து கொடுப்பதற்கும் சகாய அடிப்படையில் கட்டணத்தினை செலுத்துவதற்கும் பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.