தேயிலைச் சிறுதோட்டங்கள்: புள்ளிவிவரப் பொய்களும் மலையக யதார்த்தமும் : மருதன் ராம்

இலங்கை உலகப் புகழ்பெற்ற தேயிலை உற்பத்தி நாடாக அறியப்படுகிறது. “சிலோன் டீ” என்ற பெயர் உலக சந்தையில் இன்னும் மதிப்புடன் பேசப்படுகிறது. ஆனால், அந்தத் தேயிலையை உற்பத்தி செய்யும் சிறுதோட்ட விவசாயிகளின் வாழ்க்கையை மிக அவதானத்துடன் பார்த் தால், முற்றிலும் வேறுபட்ட ஒரு உண்மை வெளிப் படுகிறது.
அரசத் திணைக்களங்களும், தேயிலை ஆராய்ச்சி நிறுவனமும் வெளியிடும் உற்பத்திச் செலவுக் கணக்கு களை ஆராய்ந்தால், ஒரு ஏக்கர் தேயிலைத் தோட்டத்தில் இருந்து கிடைக்கும் ஆண்டு நிகர லாபம் மிகக் குறைவாக இருப்பதாகத் தெரிகிறது.  இதைப் பார்த்தவுடன் இயல்பாகவே ஒரு கேள்வி எழுகிறது.
இவ்வளவு குறைந்த வருமானம் கிடைக்கும் தொழிலில் ஏன் இன்னும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொடர்கிறார்கள்? இந்தக் கேள்விக்கான பதிலை அரச திணைக்களங்களால் வெளியிடப்படும் வெறும் லாப-நஷ்டக் கணக்குப் புத்தகங்களில் தேட முடியாது. கிராமப்புற வாழ்க்கை, குடும்ப உழைப்பு, தொடர்ச்சியான பணப்புழக்கம் மற்றும் பல தசாப்தங்களாக உருவான சந்தை அமைப்பு ஆகியவற்றை இணைத்துப் பார்த்தால்தான் உண்மையான விளக்கம் கிடைக்கும்.
தேயிலை உற்பத்திச் செலவைக் கணக்கிடும்போது, உரம், போக்குவரத்து, களை எடுப்பது, கொழுந்து பறிப்பது, கத்தரித்தல் போன்ற அனைத்துக்கும் சந்தை மதிப்பில் கூலி சேர்க்கப்படுகிறது. இது கணக்கியல் ரீதியில் சரியான அணுகுமுறையாகும். ஆனால் சிறுதோட்டங்களின் நிலை வேறு. அங்கு பெரும்பாலான வேலைகளை குடும்ப உறுப்பி னர்களே செய்கிறார்கள்.
கணவன், மனைவி, பிள்ளைகள் என அனை வரும் இணைந்து உழைக்கிறார்கள். அவர்கள் தங்களுக்குத் தனி யாக சம்பளம் வழங்கு வதில்லை. எனவே, பொருளாதார நிபுணர்கள் “செலவு” என்று கணக் கிடும் ஒரு பகுதி, விவசாயியின் பார்வையில் குடும்ப வருமானமாகவே மாறுகிறது. இதனால் காகிதத்தில் லாபம் குறைவாகத் தோன்றினாலும், அந்தப் பணம் குடும்பத்தின் அன்றாட வாழ்வாதாரத்தைத் தாங்குகிறது.
இதுவே அதிகாரப்பூர் வப் புள்ளி விவரங்களுக்கும் கிராமப்புற யதார்த்தத்திற்கும் இடையே காணப்படும் முதல் வேறுபாடாகும். குறிப்பாக தேயிலை அதிக லாபம் தரும் பயிராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதற்கு ஒரு மிகப் பெரிய பலம் இருக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, அது தொடர்ச்சியான பணப்புழக்கத்தை வழங்கு கிறது. நெல், மிளகு, பட்டை, ஏலக்காய் போன்ற பயிர்களில் அறுவடை பெற பல மாதங் கள் காத்திருக்க வேண்டும்.
இடையில் குடும்பச் செலவுகள் தொடர்ந்து இருக் கும். ஆனால் தேயிலை ஆண்டெங்கும் ஒவ்வொரு ஏழு முதல் பத்து நாட்களுக்கும் கொழுந்து பறிக்கக்கூடிய பயிராகும். இதனால் வாரம் தோறும் அல்லது இருவாரத்திற்கு ஒருமுறை வருமானம் கிடைக்கிறது. இந்தப் பணத்தில்தான் உணவு பொருட்கள் வாங்கப்படுகின்றன.
குழந்தைகளின் பள்ளிச் செலவுகள் செலுத்தப்படு கின்றன. மருந்து வாங்கப்படுகிறது. மின்சாரக் கட்டணம் கட்டப்படுகிறது. ஒரு கிராமப்புறக் குடும்பத்திற்கு இது மிகப் பெரிய பாதுகாப்பாகும். அதனால்தான் பல விவசாயிகள் தேயிலையை “பணம் கொடுக்கும் பயிர்” என்று பார்க் கிறார் கள்.
குறிப்பாக, மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் ஒரு ஏக்கர் சிறுதோட்டத் தேயிலை நிலத்திலிருந்து கிடைக் கக்கூடிய அதிகபட்ச நிகரலாபம் ஆண்டொன்றுக்கு வெறும் 350,000 ரூபாயாக மட்டுமே உள்ளதாக அரச திணைக் களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது மாதத்திற்கு சராசரியாக 29,000 ரூபாய்.
இதே தேயிலை காணி சற்று தரம் குறைந்த நிலமாக இருந்தால், இந்த நிகர லாபத்தின் அளவு பூஜ்ஜியத்தை நோக்கியோ அல்லது கடுமையான நஷ்டத்தை நோக்கியோ வீழ்ந்து விடுகிறது என்றும் அவ்வாறான திணைக்களங்கள் கூறுகின்றன. இந்த தரவுகள் கள யதார்த்தத்துக்கு முற்றிலும் முரணாக இருக்கின்றன. குறிப்பாக தேயிலையைச் சுற்றி நூற்றாண்டு காலமாக ஒரு முழுமையான சந்தை அமைப்பு உருவாகியுள்ளது. கொழுந்து சேகரிக்கும் வாகனங்கள் கிராமங்களுக்கே வந்து விடுகின்றன.
அருகிலுள்ள தொழிற்சாலை கள் பறிக்கப்படும் கொழுந்தை வாங்கத் தயாராக உள்ளன. சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் சந்தையைத் தேடி அலைவதில்லை. ஆனால் வேறு பயிர் வளர்த்தால் நிலைமை மாறுகிறது. வாங்குபவரைத் தேட வேண்டும். போக்குவரத்துக்குச் செலவிட வேண்டும். சில நேரங்களில் விளைபொருள் விற்பனையாகாமலும் போகலாம். இதனால் அதிக லாபம் கிடைக்கும் என்றாலும், ஆபத்தும் அதிகரிக்கிறது. பல தேயிலைத் தோட்டங்கள் பல தலைமுறைகளாகத் தொடர் கின்றன.
அவற்றை முழுவதுமாக அகற்றி வேறு பயிரிட வேண்டுமெனில் பெரும் செலவு ஏற்படும். புதிய பயிர் விளைச்சல் தர பல ஆண்டுகள் ஆகலாம். எனவே பலர் தற்போதுள்ள தேயிலைத் தோட்டத்தையே பராமரித்து வாழ்வதைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இங்கே இன்னொரு முக்கியமான பிரச்சினையும் உள்ளது. தேசிய அளவில் “ஏக்கருக்கு சராசரி விளைச்சல்” என்ற ஒரு எண்ணிக்கை வெளியிடப்படுகிறது. ஆனால் எல்லா ஏக்கர்களும் ஒன்றுபோல இல்லை. சில தேயிலை தோட்டங்களில் ஆயிரக்கணக்கான ஆரோக்கியமான தேயிலை மரங்கள் இருக்கின்றன.
சில தோட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட மரங்கள் அழிந்திருக்கலாம். மண் வளம், மழைப்பொழிவு, மரங்களின் வயது, பராமரிப்பு, உரமிடல், களை மேலாண்மை என பல காரணிகள் பறிக்கப்படும் கொழுந்தின் அளவை நிர்ணயிக்கின்றன. இவ்வளவு வேறுபாடுகள் இருக்கும் போது, எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு தேசிய சராசரியை வெளியிடுவது, கொள்கை முடிவுகளுக்கு போதுமான தகவலை வழங்காது. எனவே, தேயிலைத்துறைக்கு இன்று கூடுதல் மானியம் மட்டுமல்லாது துல்லியமான தரவுகளும் தேவைப்படுகின்றன.
ஒவ்வொரு பிராந்தியத்திலும் மண் வளம், காலநிலை, தேயிலையின் அடர்த்தி, பராமரிப்பு தரம், விளைச்சல் ஆகியவற்றை தனித்தனியாக மதிப்பிட வேண்டும். எந்தப் பகுதிக்கு மண் சீரமைப்பு தேவை? எங்கு புதிய நடுகை செய்ய வேண்டும்? எந்தப் பகுதிகளில் தொழில்நுட்ப ரீதியாக முதலீடு செய்தால் அதிக விளைச்சல் கிடைக்கும்? இவற்றை அறிவியல் அடிப்படையில் தீர்மானிக் காமல், எல்லோருக்கும் ஒரே மாதிரியான திட்டங்களை வழங்குவது பயனளிக்காது.
உர மானியம் அரசியல் விவாதமாக மாறுவது புதிதல்ல. ஆனால் மானியம் எல்லாக் காலத்திலும் ஒரே அளவில் வழங்கப்பட வேண்டுமா? என்பது முக்கியமான விடயமாக அமைகிறது. உலகச் சந்தையில் உர விலை குறைந்தால், மானியம் தேவைப்படாது. ஆனால் திடீரென விலை அதிகரித்து சிறு தேயிலைத் தோட்ட உரிமை யாளர்களின் செலவு தாங்க முடியாத அளவுக்கு உயர்ந்தால், அப்போது மட்டும் பாதுகாப்பு வழங்கும் அமைப்பு ஒன்றை உருவாக்கலாம்.
தேயிலை இன்று இலங்கையின் சிறுதோட்ட உரிமையாளர்களின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. ஆனால் அது வெறும் உயிர்வாழ் வுக்கான பயிராகவே தொடர வேண்டுமா? அல்லது அதிக வருமானம் தரும், நவீன தொழில்நுட்பம் சார்ந்த, தரத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு போட்டித்திறன் கொண்ட தொழிலாக மாற வேண்டுமா? என்ற கேள்வி பிரதானமாக எழுகிறது.
இந்தக் கேள்விக்கான பதில் புதிய தரவுகள், அறிவியல் திட்டமிடல், சந்தை சார்ந்த கொள்கைகள் மற்றும் சிறுதோட்ட உரிமையாளர்களை மையமாகக் கொண்ட சீர்திருத்தங்களில் தான் தங்கி இருக்கிறது.‌ தேயிலை ஒரு குடும்பத்தை ஒரே இரவில் செல்வந்தராக்கும் தொழிலாக கருத முடியாது. ஆனால் அது ஆயிரக்கணக்கான கிராமப் புறக் குடும்பங்களுக்கு வாரம் தோறும் பணப்புழக் கத்தை வழங்கும் ஒன்றாக இருக்கிறது. எனவே, தேயிலையை வெறும் லாப-நஷ்டக் கணக்குகளால் மட்டும் மதிப்பிட முடியாது.
அதே நேரத்தில், பழைய சராசரி புள்ளிவிவரங்களை மட்டுமே நம்பி எதிர்காலத்தை உருவாக்கவும் முடியாது. உண்மையான தரவுகள், அறிவியல் அடிப்படையிலான முடிவுகள், இலக்கு வைக்கப்பட்ட முதலீடுகள் மற்றும் சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படும் கொள்கைகளே இலங்கைத் தேயிலைத்துறைக்கு புதிய உயிர் ஊட்டும்.  குறிப்பாக 200 ஆண்டுகளுக்கும் மேலாக காணி உரிமை யற்றவர்களாக வாழும் மலையகப் பெருந்தோட்ட மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை கடந்த பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன. அதற் காக மக்களை தயார்படுத்தும் பணிகளும் அரசு அதிகாரி களை தெளிவூட்டும் பணிகளும் வெவ்வேறு அரசியல் கட்சிகள் சார்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறிருக் கையில், சிறு தேயிலைத் தோட்ட வருமானம் சார்ந்து வெளியிடப்படும் எதார்த்தமற்ற தரவுகள் மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கான எதிர்கால மாற்றத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.