யாழில் போலி ஆவணங்களுடன் காணிகளை கைப்பற்றும் கும்பல் குறித்து விசாரணை

யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் காவல்துறையிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி ஒன்றினை கையகப்படுத்தும் நோக்குடன் அவற்றுக்கு எல்லை தூண்களை நடும் வேலையில் கும்பல் ஒன்று ஈடுபட்டுள்ளது.

இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் அவ்விடத்திற்கு சென்று , தனது காணிக்கு தூண்களை நடுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்

அதற்கு குறித்த கும்பல் காணி தம்முடையது எனவும் , “உன்னுடைய காணி என்றால், அதற்கான உறுதி ஆவணங்களை கொண்டு வந்து உறுதிப்படுத்து” என்று மிரட்டும் தொனியில் கூறியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து காணி உரிமையாளர் காவல்துறையிடம் முறைப்பாடு பதிவு செய்த நிலையில் , குறித்த கும்பல் காணியில் இருந்து வெளியேறி சென்றுள்ளது.

அதேவேளை குறித்த கும்பல் சில தினங்களுக்கு முன்னரும் திருநெல்வேலி பகுதியில் வேறொரு வெற்றுக்காணிக்கு தூண்களை இடும் பணிகளில் ஈடுபட்டதுடன் காணி உரிமையாளர் காவல்துறையினருக்கு அழைப்பை ஏற்படுத்த முற்பட்ட நிலையில் அவர்கள் அங்கிருந்து வெளியேறி சென்றனர்.

இந்தநிலையில் குறித்த கும்பல் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் , வெற்றுக்காணிகளை இலக்கு வைத்து செயற்படும் கும்பல் தொடர்பில் பொதுமக்கள் விழிப்பாக இருக்குமாறும் கோரியுள்ளனர்