யாழ்ப்பாணம் – பலாலியில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
யுத்தத்தினால் இடம்பெயர்ந்து கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் பலாலி சந்தியில் நேற்று (12) நான்காவது தடவையாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமது காணிகளை இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாங்கள் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வருவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறிப்பிட்டனர்.
இந்தநிலையில் கொட்டகை அமைத்து போராட்டத்தை முன்னெடுக்க மக்கள் முயற்சித்த போது காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து மக்கள் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதேவேளை, ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசாங்கம், தனது இயலாமையை மறைக்காமல், காணி விடுவிப்பு தொடர்பில் கடந்தகால அரசாங்கங்களினால் எடுக்கப்பட்ட முடிவுகளையும், கொள்கை ரீதியாக ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடுகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது
பலாலி மக்கள் தமக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்கக் கோரி இன்று (12) முன்னெடுத்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி கலந்துகொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தது.



