சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த ரவிகரன் எம்.பி வலியுறுத்து

தற்போது முல்லைத்தீவு கடற்பரப்பில் அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரிடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு கடற்படை மற்றும் துறை சார்ந்த உரிய அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சரும் பிரதி அமைச்சரும் உடனடியாக உத்தரவிட்டுள்ளனர்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சுக்குரிய அலுவலகத்தில் நேற்று (9) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துமாறு நாமும் தொடர்ச்சியாக பராளுமன்றிலும், கடற்றொழில் அமைச்சரிடமும், உரிய துறை சார்ந்த தரப்பினரிடமும் வலியுறுத்தி வருகின்றோம்.

அந்தவகையில் முல்லைத்தீவு கடற்பரப்பில் அண்மை நாட்களாக வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், சுருக்குவலை, டைனமைட் வெடிவைத்து மீன்பிடித்தல் உள்ளிட்ட சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுவதாக நேற்று முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்னிடம் முறையிட்டிருந்தனர்.

அவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவுக் கடற்பரப்பில் இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்டவற்றையும் ஆதாரங்களாக தம்மால் சமர்ப்பிக்க முடியும் எனவும் கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இத்தகைய சூழலில் உடனடியாக பாராளுமன்றத்தில் கடற்றொழில் அமைச்சருக்குரிய அலுவலகத்திற்குச் சென்று கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடற்றொழில் பிரதி அமைச்சர் ஆகியோரிடம் குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் தொடர்பாக விரிவாக எடுத்துக்கூறியிருந்தேன்.

குறிப்பாக சிறுதொழிலாளர்கள் படும் துன்பங்களையும் வேதனைகளையும் கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரது கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளேன்.

இவ்வாறு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகரித்திருப்பதால், சிறு தொழிலாளர்கள் கடற்றொழில் செய்ய முடியாத நிலை காணப்படுவதை அவர்களிடம் சுட்டிக்காட்டியிருந்தேன்.

சட்டவிரோதிகள் மாத்திரம்தான் கடற்றொழில் செய்யமுடியுமா எனவும் இதன்போது அவர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தேன்.

அத்தோடு கடற்படையினர் கடலில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும்போது சட்டவிரோத கடற்றொழில் செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும், மாறாக சட்டமுறைகளுக்கு உட்பட்டு கடற்றொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற சிறுதொழிலாளர்களிடம் அனுமதிப்பத்திரங்கள் இருக்கின்றனவா என பலதரப்பட்ட விசாரணைகளை நடத்துவதாக கடற்றொழிலாளர்கள் என்னிடம் முறையிட்டிருந்தனர். அதனை நான் கடற்றொழில் அமைச்சருக்கும் பிரதி அமைச்சருக்கும் தெரியப்படுத்தியிருந்தேன்.

அதேவேளை இத்தகைய சட்டவிரோத கடற்றொழிலாளர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன்.

இந்நிலையில், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை நிறுத்துமாறு தாமும் தொடர்ந்து கூறிவருவதாகவும், அவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் தம்மால் எடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்தோடு இவ்வாறாக முல்லைத்தீவு கடற்பரப்பில் தற்போது அதிகரித்துள்ள சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்குமாறு கடற்படையினருக்கும், துறைசார் திணைக்கள அதிகாரிகளுக்கும் எனக்கு முன்பாகவே கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இன்று (10)  கடற்றொழில் அமைச்சரிடமும், பிரதி அமைச்சரிடமும் சமர்ப்பிப்பதாகக் கூறிவிட்டு வந்திருக்கின்றேன்.

அந்த வகையில் இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளுக்கு எதிராக விரைவில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றேன் -என்று தெரிவித்தார்.