பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு : யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் உட்பட இருவருக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து பேராசிரியர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விசாரணைகளை, காலத்தை இழுத்தடிக்காமல் துரிதப்படுத்துமாறு கோரி, பல்கலைக்கழக முன்றலில் போராட்டம் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் இன்றைய தினம் வியாழக்கிழமை (9) காலை “பாலியல் வன்முறைகளுக்கு எதிரான மக்கள் இயக்கம்” எனும் அமைப்பின் அழைப்பில் இப்போராட்டம் இடம்பெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் உள்ளிட்ட இருவர் மாணவிகளை துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கினார்கள் எனும் குற்றச்சாட்டில், பல்கலைக்கழக மட்டத்தில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறான நிலையில், காலத்தை இழுத்தடிக்காமல், விசாரணைகளை துரிதமாக நடத்துமாறு கோரி, பல்கலைக்கழகத்துக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்த நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இன்று (09.07.2026) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் எவரும் பங்கேற்கவில்லை என்பதையும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களுக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்பதையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியமாக வலியுறுத்துகின்றோம்

இவ்வாறான போராட்டங்கள் வெவ்வேறு அரசியல் மற்றும் தனிப்பட்ட நலன்களுடன் முன்னெடுக்கப்படுவவை என்பதையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டிகாட்டுகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.