ஈரான் , அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவால் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம்

ஹார்​முஸ் ஜலசந்​தியை கடந்த 3 கப்​பல்​கள் மீது ஈரான் திடீரென தாக்​குதல் நடத்​தி​ய​தால், அந்த நாட்​டின் 80 இடங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்​குதல் நடத்​தி​யது. ‘‘ஈரானுட​னான போர் நிறுத்த ஒப்​பந்​தம் முறிந்​து​விட்​டது. ஈரானுடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வது வீணானது’’ என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார். இதனால் வளை​குடா நாடு​களில் மீண்​டும் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த மாதம் 17-ம் தேதி போர் நிறுத்​தம் தொடர்​பான அமைதி ஒப்​பந்​தம் ஏற்​பட்​டது. அந்த ஒப்​பந்​தத்​தில் 14 அம்​சங்​கள் இடம்​பெற்​றன. இரு தரப்பு போர் நிறுத்​தம், கச்சா எண்​ணெய் கப்​பல் போக்​கு​வரத்​துக்கு ஹார்​முஸ் ஜலசந்தி திறப்​பு, ஈரான் மீதான தடைகள் நீக்​கம் உட்பட 14 அம்​சங்​கள் அமைதி ஒப்​பந்​தத்​தில் இடம்​பெற்​றன.

இதையடுத்​து, ஹார்​முஸ் ஜலசந்தி கப்​பல் போக்​கு​வரத்​துக்கு திறந்து விடப்​பட்​டது. எனினும், ஈரான் கடலோர பகு​தி​யில் உள்ள வழித்​தடத்​தில்​தான் செல்ல வேண்​டும், ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்​தி​யைக் கடந்து சென்​றால் தாக்​குதல் நடத்​தப்​படும் என்று ஈரான் தொடர்ந்து எச்​சரிக்கை விடுத்து வந்​தது.

இந்​நிலை​யில், மார்​ஷல் தீவு எண்​ணெய் கப்​பல் அல் ரெஹா​யத், சவுதி கப்​பல் வெட்​யான், லைபீரியா கப்​பல் சைப்​ரஸ் ப்ராஸ்​பெரிட்டி ஆகிய 3 எண்​ணெய் கப்​பல்​கள் ஓமன் கடற்​கரையை ஒட்டி ஹார்​முஸ் ஜலசந்​தியை நேற்று முன்​தினம் கடந்​தன. அவற்​றின் மீது ஈரான் ராணுவத்​தினர் திடீரென தாக்​குதல் நடத்​தினர்.

அதற்கு பதிலடி​யாக ஈரானின் துறை​முக நகரங்​கள் பந்​தர் அப்​பாஸ், சிரிக், கேஷ்ம்ப் தீவு உட்பட 80 இடங்​களில் அமெரிக்கா நேற்று முன்​தினம் குண்டு வீசி தாக்​குதல் நடத்​தி​யது. இதில் வான் பாது​காப்​புக் கருவி​கள், ரேடார் மையங்​கள், ஏவு​கணை தளங்​கள், 60-க்​கும் மேற்​பட்ட கடற்​படை படகு​கள் அழிக்​கப்​பட்​ட​தாக அமெரிக்க ராணுவ கட்​டுப்​பாட்டு மையம் சென்ட்​காம் தெரி​வித்​தது.

அமெரிக்​கா​வின் தாக்​குதலுக்​குப் பதிலடி​யாக பஹ்ரைன், குவைத் மற்​றும் இதர வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மீது ஈரான் தாக்​குதல் நடத்​தி​யது. இதனால் வளை​குடா நாடு​களில் மீண்​டும் பதற்​றம் ஏற்​பட்​டுள்​ளது.

அதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய​தாவது: என்​னைப் பொறுத்த வரை, ஈரானுடன் சண்டை நிறுத்தம் முடிந்​து​விட்​ட​தாக நினைக்​கிறேன். ஈரான் தலைவர்​கள் மனநோ​யாளி​கள், தீய​வர்​கள், வன்முறை​யாளர்​கள். அவர்களிடம் ஏதோ தவறு உள்ளது. ஈரான் தலை​வர்​களு​டன் பேச்சுவார்த்தை நடத்​துபவர்கள் தொடர்ந்து நடத்​தட்​டும். ஆனால், அவர்​கள் நேரத்தை வீணடிக்​கிறார்​கள்.

கமேனி​யின் ஈமச்​சடங்கை நடத்​து​வதற்​குப் பதிலாக, எண்​ணெய் கப்​பல்​கள் மீது தாக்​குதல் நடத்த தொடங்​கினர். அதனால் நேற்று முன்​தினம் நாங்​கள் ஈரானை கடுமை​யாகத் தாக்​கினோம். மீண்டும் கடுமையாகத் தாக்க திட்டமிட்டுள்ளோம். கார்க் தீவை கைப்பற்றவும் திட்டமிட்டுள்ளோம். ஹார்முஸ் ஜல சந்தியை நாங்கள் மீண்டும் முற்றுகையிடலாம். அங்கு கண்ணிவெடிகளை அகற்ற நேட்டோ நாடுகள் போர்க் கப்பல்களை அனுப்புகின்றன. இவ்​வாறு அதிபர் ட்ரம்ப் கூறி​னார்.