ஜனநாயகத்தை நிலைநிறுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: சஜித் தெரிவிப்பு

இலங்கையில் எதேச்சாதிகார, சர்வாதிகார தனிக் கட்சி ஆட்சியற்ற உண்மையான ஜனநாயகத்தை நிலைநிறுத்த, அரசியல் பேதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவக கேட்போர் கூடத்தில் நேற்று (06) திங்கட்கிழமை நடைபெற்ற, ‘இலங்கை சிவில் சமூகங்களின் பயணப் பாதை’ எனும் தொனிப்பொருளிலான விசேட மாநாட்டில் முதன்மை உரையற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இலங்கையிலுள்ள சிவில் சமூக அமைப்புகளை ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர்,

தற்போதைய காலகட்டத்தில் ஜனநாயகம் வலுப்பெறுவதற்குப் பதிலாக, அதன் விழுமியங்கள் சீர்குலைக்கப்பட்டு வருகின்றன. சர்வாதிகாரத்தையும் தனிக் கட்சி ஆட்சியையும் முன்னிறுத்தும் சக்திகளுக்கு மத்தியில், சிவில் சமூக அமைப்புகளை ஜனநாயகத்தின் பலமான பிணைப்பாக மாற்றுவதே இந்தச் சந்திப்பின் நோக்கமாகும்.

இது தேர்தலுக்கான ஆயத்தமோ அல்லது அரசியல் கூட்டணியோ அல்ல. ஜனநாயகம் என்பது வெறும் தேர்தலோடு முடிந்துவிடுவதில்லை. மக்கள் மையப்படுத்தப்பட்ட கொள்கை உருவாக்கம், மக்களின் கருத்துக்களுக்குச் செவிசாய்த்தல், அதிகாரங்களுக்கிடையிலான தடைகள் மற்றும் சமன்பாடுகள் முறைமை ஆகியவற்றை உள்ளடக்கியதே உண்மையான ஜனநாயகம் ஆகும். இந்த பயணத்தில் சுதந்திர ஊடகங்களும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும்.

கடந்த காலத்தில் அரசியல்வாதிகள் தங்களின் அதிகாரக் குரோதங்களுக்காக சிவில் சமூக அமைப்புகளைப் பயன்படுத்திவிட்டு, பின்னர் அவர்களை மறந்துவிட்ட கசப்பான வரலாறு உண்டு. மாதுலுவாவே சோபித தேரர் போன்ற பல சிவில் செயற்பாட்டாளர்கள் மாற்றத்திற்காக உழைத்தும், இறுதியில் மதிக்கப்படவில்லை. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் சிவில் சமூக அமைப்புகளுடன் ஏற்படுத்திக் கொள்ளும் ‘தேசிய மக்கள் இணக்கப்பாடு’ வெறும் பேச்சோடு நின்றுவிடாமல், நாட்டின் சட்டதிட்டங்கள் ஊடாக அதற்கு உயிர் கொடுக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பு பேரவையில் சிவில் சமூகப் பிரதிநிதிகள் அங்கம் வகிப்பதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் ஓரளவாவது கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுகிறது. கடந்த காலங்களில் நாட்டிற்குத் தரம் குறைந்த நிலக்கரி வரவழைக்கப்பட்ட போது, அதற்கு எதிராக சிவில் சமூகம் நின்றதாலேயே சம்பந்தப்பட்ட வலுச்சக்தி அமைச்சரையும், செயலாளரையும் வீட்டிற்கு அனுப்ப முடிந்தது.

அதேபோன்று, அண்மையில் பெறுமதி சேர் வரி மற்றும் எஸ்.எஸ்.சி.எல். வரிகளை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் முயற்சி, சிவில் சமூக அமைப்புகளின் தொடர் போராட்டங்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் குரல் காரணமாகவே தோற்கடிக்கப்பட்டது. 159 பெரும்பான்மையைக் கொண்ட அரசாங்கம் மக்களின் இந்த சவாலுக்குப் பணிந்து, அதனைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதன் மூலம், நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிட அரசாங்கம் முயற்சிக்கிறது. இது மக்கள் எதிர்பாத்த முறைமை மாற்றம் அல்ல, மாறாக ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காகும். ஜனநாயகத்தின் தூண்களான சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை ஆகியவற்றுக்கு நிகராக சுதந்திர ஊடகங்களும் சிவில் சமூக அமைப்புகளும் இன்றியமையாதவை.