கோட்டாபயவின் மனுவை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சட்ட மா அதிபர் கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு சட்ட மாஅதிபர் இன்று (06) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தம்மைக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரியே முன்னாள் ஜனாதிபதி இந்த மனுவை சமர்ப்பித்திருந்தார்.

இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் சுஹர்ஷி ஹேரத் நீதிமன்றத்தில் தனது சமர்ப்பிப்புகளை முன்வைத்தார்.

மனுதாரரால் கோரப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தும் அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடையவை என்பதால், அது குறித்து பரிசீலனை செய்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் காரணமாகவே, குறித்த மனுவை தகுந்த உத்தரவின் பேரில் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு அவர் நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

இதன்போது, மனுதாரரான முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தனது தரப்பு சமர்ப்பிப்புகளை நிறைவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் மேலதிக சமர்ப்பிப்புகளுக்கான விசாரணையை எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.