இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
அத்துடன் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கான பிரத்தியேக சட்டமூலம் இன்னும் இரண்டுமாத காலத்துக்குள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“அரசியல் அநாதைகளாக இருந்தவர்கள் தற்போது சுரேஷ் சலேவின் விவகாரத்தை கையில் எடுத்து அவருக்கு சார்பாக பேசுகிறார்கள்”.
“உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்த விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் சாட்சியங்களுக்கு அமைவாகவே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார்.
சட்டத்தின் பிரகாரம் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை இடைநிறுத்துமாறு ஒருதரப்பினர் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டால் விசாரணைகளை நிறுத்த முடியுமா, அவ்வாறு இடம்பெற்றால் சட்டத்தின் மீது நாட்டு மக்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள்” என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“சட்டத்தின் முன் எவருக்கும் விசேட சலுகை வழங்கப்படமாட்டாது. சுரேஷ் சலேவுக்காக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அல்லது போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மக்களுக்கு போலியான விடயங்களை குறிப்பிடாமல் நீதிமன்றத்தை நாடலாம். தமது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கலாம். நீதியை பெற்றுக்கொள்ளலாம்.இதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது” என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.



