சுரேஷ் சலேவின் சகல கோரிக்கைகளையும் நீதிமன்றம் நிராகரிப்பு

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே குறித்து நீதிமன்றிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும் மறுக்கப்பட்டுள்ளன.

வழக்கு விசாரணையில் திறந்த நீதிமன்றத்தில் 23 பக்க உத்தரவை வாசித்த நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் தனது உத்தரவில் குறிப்பிட்ட நீதவான், அடுத்த நீதிமன்ற விசாரணையின்போது சந்தேக நபர்களை இணைய வழி ஊடாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பாதுகாப்பு அமைச்சரால் பெப்ரவரி 28, 2026 அன்று முதலில் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவு, பின்னர் மே 27, 2026 அன்று நீட்டிக்கப்பட்டது.

அதன்படி சந்தேக நபரை சி.ஐ.டி காவலில் வைத்து விசாரிக்க வேண்டும்.

இந்த விசாரணை மிகவும் சிக்கலானதாக இருப்பதால், சட்டமா அதிபர் இதை நேரடியாக மேற்பார்வையிடுகிறார்.

வழக்கின் விசாரணை அதிகாரிகள் தங்களது கடமைகளை மிகவும் சிறப்பாகவும் திறமையாகவும் ஆற்றி வருகின்றனர் என்றும் தன்னிடம் நன்றாக நடந்து கொள்வதாகவும் முந்தைய நீதிபதியிடம் கூறியிருந்ததால், விசாரணைக் குழுவை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் நீதான் தமது உத்தரவில் குறிப்பிட்டார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 9 (1)-இன் கீழ் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவைக் சவாலுக்கு உட்படுத்த நீதவான் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்

அதேநேரம் சந்தேக நபருக்கு வெளியிலிருந்து புத்தகங்கள், செய்தித்தாள்கள் அல்லது பத்திரிகைகளை வழங்குவதற்கான கோரிக்கையையும் நிராகரிக்கப்படுகிறது.

சி.ஐ.டி நூலகத்திலிருந்து வாசிப்புப் பொருட்களைப் பார்க்க காவல்துறை ஏற்கனவே அவருக்கு அனுமதி அளித்துள்ளது.

மேலும் வெளியிலிருந்து பொருட்களைக் கொண்டு வருவதால் தேவையற்ற தகவல்கள் பரிமாறப்படும் அபாயம் உள்ளது என்றும் நீதவான் தெரிவித்தார்.

சந்தேக நபர் தவறான முடிவெடுக்கும் அபாயத்தில் இருப்பது தெரியவந்துள்ளதால், அவருக்குப் பேனை கொடுத்தால் ஆபத்து ஏற்படக்கூடும். இதனால் பேனை வழங்குவதற்கான கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரிக்கின்றது என்று நீதவான் தமது உத்தரவில் தெரிவித்தார்