பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பு: அமைச்சர் சந்திரசேகர் கருத்து

பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கே எமது அரசாங்கம் பாடுபடுகின்றது. ‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் ஊடாக மக்களின் மனங்களில் உள்ள மாசுகளை நீக்கி, சமூக அக்கறையுள்ள, பாதுகாப்பான சமூகமொன்றை உருவாக்க நாம் விளைகின்றோம் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

 யாழ்ப்பாணம் கலாச்சார மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் முதலாவது தமிழ்ப் பெண் அமைச்சர் என்ற பெருமையை இன்றைய பிரதம அதிதியான அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பெற்றுள்ளார்.நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றுவோம் என்ற உறுதியுடனேயே நாம் பொறுப்பேற்றோம்; அதற்கான மாற்றங்களைச் செய்தும் வருகின்றோம்.

சமீபத்தில் அரச நிறுவனத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பான ஒலிப்பதிவொன்று வெளியாகியிருந்தது. பெண்களைத் துன்புறுத்துபவர்களின் முகத்திரைகளை நாம் நிச்சயம் கிழித்தெறிவோம்.

பெண்களின் பாதுகாப்புக்கான நிரந்தரக் கட்டமைப்பொன்றை உருவாக்குவதற்கே எமது அரசாங்கம் பாடுபடுகின்றது. தற்காலத்தில் பெற்றோர்கள் சமூக அக்கறையின்றி, தமது பிள்ளைகளை வெளி உலகம் தெரியாத வகையில் வளர்க்கின்றனர்.

‘தூய்மை இலங்கை’ செயற்றிட்டத்தின் ஊடாக மக்களின் மனங்களில் உள்ள மாசுகளை நீக்கி, சமூக அக்கறையுள்ள, பாதுகாப்பான சமூகமொன்றை உருவாக்க நாம் விளைகின்றோம் என்றார்.