மறுசீரமைப்புக்களுக்கு முன்னுரிமை அளியுங்கள் – IMF வலியுறுத்தல்

விரிவாக்கப்பட்ட நிதி வசதிச்செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்புக்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து, அவற்றைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தவேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி எவான் பபஜோர்ஜியோ வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் பெரும்பாகப் பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் கீழுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் எட்டப்பட்டுள்ள அடைவுகள் என்பன குறித்து ஆராயும் நோக்கில் கடந்த 24 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதந்த சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டப் பிரதானி எவான் பபஜோர்ஜியோ தலைமையிலான அதிகாரிகள் குழு,  செவ்வாய்க்கிழமை (30) வரை நாட்டில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை நடாத்தியிருந்தனர்.

அதனையடுத்து தமது அவதானிப்புக்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் நேற்றைய தினம் கொழும்பிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவினரால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் வருமாறு:

மத்திய கிழக்கு யுத்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கைகள் பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்துவதற்குப் பெரிதும் பங்களிப்புச் செய்தன. பொருளாதார மறுசீரமைப்பு செயற்திட்டங்கள் மூலம் அடையப்பட்ட நன்மைகள், கொள்கை ரீதியிலான பதிலளிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான இடைவெளியை உருவாக்கின.
வெளியக அதிர்ச்சிகளை எதிர்கொள்வதற்கும், நிதியியல் மற்றும் வெளியக நிதி நிலைமையில் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும், பின்னடைவுகளுக்கு முகங்கொடுப்பற்கான திறனைக் கட்டியெழுப்புவதற்கும், வலுவானதும் சகலரையும் உள்ளடக்கியதுமான வளர்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் மறுசீரமைப்புக்களைத் தொடர்வது மிக அவசியமாகின்றது.

விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் கீழான கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எதிர்வருங்காலத்தில் இடம்பெறும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழுவின் வருகையின்போது மேற்கொள்ளப்படும் 7 ஆவது மதிப்பீட்டின்போது விரிவாக ஆராயப்படும்.

மத்திய கிழக்கு யுத்தம் இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் விலை உயர்வை அடுத்து கடந்த பெப்ரவரி மாதம் 1.6 சதவீதமாகக் காணப்பட்ட முதன்மைப் பணவீக்கம், மே மாதம் 5.5 சதவீதமாக உயர்வடைந்தது. இக்காலப்பகுதியில் சுற்றுலாப்பயணிகளின் வருகையிலும், வெளிநாட்டுக் கையிருப்பின் பெறுமதியிலும் வீழ்ச்சியொன்று பதிவானது. இவற்றின் விளைவாக அரசாங்கம் எரிபொருள், மின்சாரம் மற்றும் உர மானியங்களையும், வெகுவாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ள நலிவுற்ற குடும்பங்களுக்கான நிதியுதவி வசதிகளையும் அறிமுகப்படுத்தியது.

அதேவேளை வரிக் கட்டமைப்பை வலுப்படுத்தல், வரி அடிப்படையை விரிவுபடுத்தல் மற்றும் செலவின நிலுவைகள் உருவாவதைத் தடுத்தல் என்பன உள்ளடங்கலாக பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரவேண்டும்.

அத்தோடு அரச கட்டமைப்புக்களின் மறுசீரமைப்பை விரைவுபடுத்துவதும், செலவினங்களை ஈடுசெய்யக்கூடிய விலை நிர்ணயத்தை நடைமுறைப்படுத்துவதும் மிகமுக்கியமானதாகும்.