திருகோணமலையில் காணிகள் கையகப்படுத்தல் விவகாரம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

திருகோணமலை – முத்து நகர் பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டத்திற்காகத் தங்களது விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்து கொழும்பிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த முத்து நகர் ஒன்றிணைந்த விவசாய சங்கத்தின் செயலாளர் சஹீலா சபூர்தீன், தங்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கப்பெறவில்லை என சுட்டிக்காட்டினார்.

இலங்கை துறைமுக அதிகார சபையினால் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதன் விளைவாக, சுமார் 342 விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீதிக்கு வந்துள்ளதாகவும், இதனால் அவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சீனக்குடா காவல்துறையினர் அண்மையில் இரவு வேளையில் விவசாயக் குடும்பம் ஒன்றின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தேடுதலில் ஈடுபட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“இவ்வாறான செயற்பாடு அடிப்படை உரிமைகளை மீறும் செயல் எனத் தெரிவித்துள்ள விவசாய சங்கத்தினர், இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர்”.

பிரதமர் ஊடாகத் தங்களுக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள விவசாயிகள், நீதிக்காகப் போராடி வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.