வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபனின் பதவியையும், மாநகரசபை உறுப்புரிமையையும் ரத்து செய்த வட மாகாண ஆளுநரின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியாவில் இன்று (29)மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா பண்டாரவன்னியன் சதுக்கத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்தப் போராட்டம், மன்னார் வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று காமினி மகா வித்தியாலயம் முன்பாக நிறைவடைந்தது.
போராட்டத்தின் போது, ஆளுநரின் குறித்த நடவடிக்கை ஜனநாயக விழுமியங்களுக்கு முரணானது எனச் சுட்டிக்காட்டிய பங்கேற்பாளர்கள், மாநகர முதல்வரின் உறுப்புரிமையை உடனடியாக மீளப் பரிசீலிக்குமாறு வலியுறுத்தினர்.
கடந்த 24 ஆம் திகதி வட மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாகவே வவுனியா மாநகர முதல்வர் சு.காண்டீபனின் பதவி மற்றும் உறுப்புரிமை நீக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானத்தை எதிர்த்து இடம்பெற்ற இன்றைய ஆர்ப்பாட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான றிஷாட் பதியுதீன், ப.சத்தியலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், முத்து முகமது மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது கண்டனத்தை வெளியிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராகப் பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன், தமது எதிர்ப்பினைப் பறைசாற்றும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியின் பதவியை, இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்குவது ஏற்புடையதல்ல என்பதை வலியுறுத்தும் வகையில் இந்தப் போராட்டம் அமைந்திருந்தது.



