திருக்கோணமலை பிரகடன விவகாரம்: மட்டக்களப்பில் கலந்துரையாடல்!

மட்டக்களப்பு, ஜூன் 28 ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் – திருக்கோணமலை பிரகடனம் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதனை மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்லும் வழிமுறைகள் குறித்து ஆராயும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) மட்டக்களப்பிலுள்ள அமெரிக்கன் சிலோன் மிஷன் மண்டபத்தில் நடைபெற்றது.

ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டம், மட்டக்களப்பு கிழக்கு சிவில் சமூக செயல்பாட்டாளர்களின் ஒன்றியத் தலைவரும் ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் மாவட்ட செயற்பாட்டாளருமான ச.சிவயோகநாதனின் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, திருகோணமலை பிரகடனத்தின் அடிப்படை நோக்கங்கள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான செயற்திட்டங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. மேலும், எதிர்காலத்தில் மாவட்ட மட்டத்திலும் பிராந்திய மட்டத்திலும் மேற்கொள்ளப்பட வேண்டிய விழிப்புணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் ஈழத் தமிழர் உரிமைகள் பெருமன்றின் மட்டக்களப்பு மாவட்ட செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர் அருட்பணி லூக்ஜோன்  சிவில் சமூக பிரதிநிதிகள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்  தமிழ்ப் பொது வேட்பாளருமாகிய பா.அரியநேந்திரன் மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள், திருக்கோணமலை பிரகடனத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான செயற்திட்டங்கள், மக்களிடையே அதன் அரசியல் மற்றும் சமூக முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நடவடிக்கைகள், மற்றும் ஒருங்கிணைந்த மக்கள் இயக்கத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகள் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்தனர்.

இறுதியாக, திருக்கோணமலை பிரகடனத்தின் இலக்குகளை அடைவதற்காக மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியான மக்கள் சந்திப்புகள், விழிப்புணர்வு நிகழ்வுகள் மற்றும் ஒருங்கிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.