காசா மற்றும் மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனக் குழந்தைகளை இஸ்ரேலியப் படைகள் திட்டமிட்டு குறிவைத்து கொன்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது; இந்தத் தாக்குதல்கள் போர்க்குற்றங்களுக்குச் சமமானவை என்றும், இனப்படுகொலை நோக்கத்தைக் கொண்டிருப்பதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் மற்றும் இஸ்ரேல் தொடர்பான ஐ.நா.வின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையத்தின் தலைவரான சீனிவாசன் முரளிதர், செவ்வாய்க்கிழமையன்று(23) தகவல்களை தெரிவித்துள்ளார்.
ஆணையத்தின் தகவலின்படி, அக்டோபர் 2023 மற்றும் அக்டோபர் 2025க்கு இடைப்பட்ட காலத்தில் இஸ்ரேலியப் படைகள் 20,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனக் குழந்தைகளைக் கொன்றன மற்றும் 44,000-க்கும் மேற்பட்டோரைக் காயப்படுத்தின. பிப்ரவரி 2026-க்குள் காசாவில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 21,289 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,500 ஆகவும் உயர்ந்ததாக யுனிசெஃப் (UNICEF) அமைப்பின் ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் கொல்லப்பட் டவர்களில் சுமார் 30% பேர் குழந்தைகள் என்றும், அவர்கள் மீதான தாக்குதல்கள் “தொடர்ச்சியான நடவடிக்கையாக” இருந்து வருவதாகவும் முரளிதர் குறிப்பிட்டார்.
பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறும்போது, கூடாரங்களில் தங்கியிருக்கும்போது, உதவி வழங் கப்படும் இடங்களை அணுகும்போது அல்லது இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருக்கும்போது இஸ் ரேலிய துப்பாக்கிச் சுடும் வீரர்கள் (snipers) அல்லது ட்ரோன்களால் குழந்தைகள் சுடப்பட்ட சம்பவங்களையும் இந்த அறிக்கை பதிவு செய்துள்ளது.
காசாவில் இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள், அத்துடன் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் போர்க் குற்றங்கள் ஆகியவற்றை இஸ்ரேலிய அதிகாரிகளும் பாதுகாப்புப் படைகளும் தொடர்ந்து செய்து வருவதாக ஆணையம் முடிவு செய்துள்ளது.


