இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துவதற்கும் பிரித்தானியாவின் ஒத்துழைப்பை இலங்கைத் தமிழரசுக்கட்சி கோரியுள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் லோரா போஃபில்ஸ் (Laura Fogarty) மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பட்ரிக் ஆகியோருக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பாராளுமன்றக் குழுத் தலைவர் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னைய தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர்கள் பல்வேறு காரணங்களால் இதில் கலந்துகொள்ளவில்லை.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்துவதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
அத்துடன், நீண்டகாலமாக ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்த வேண்டியதன் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டதுடன், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், சமத்துவம், கண்ணியம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
மனித உரிமைகளைப் பாதுகாத்தல், பொறுப்புக்கூறல், ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முடுக்கிவிட வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு சமாந்தரமான அரசியல் முன்னேற்றம் இன்றியமையாதது எனவும், ஜனநாயகக் கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டது.
அதேநேரம், இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நிலையான அரசியல் தீர்வை உறுதிப்படுத்துவதற்காக பிரித்தானியா வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவுக்கு, தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் இதன்போது தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டனர்.


