பிரித்தானிய உயர்மட்ட இராஜதந்திர அதிகாரியுடன் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் சந்திப்பு

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய இராச்சியத்தின் வெளிநாட்டு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் (FCDO) தெற்காசியப் பிராந்தியப் பணிப்பாளர் லோரா போஃபில்ஸ் (Laure Beaufils) அவர்களை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பாராளுமன்ற உறுப்பினரான இரா சாணக்கியன் அவர்களும் , பொதுச் செயலாளர் திரு. எம்.ஏ. சுமந்திரன் அவர்களுடன் இணைந்து சந்தித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பின்போது, இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் தமிழர் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகள் தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து ஆழமான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

குறிப்பாக, அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதன் அவசியம், நீண்டகாலமாக நடத்தப்படாமல் நிலுவையில் உள்ள மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்த வேண்டிய தேவை, மனித உரிமைகள் பாதுகாப்பு, பொறுப்புக்கூறல், இடைநிலை நீதி, ஜனநாயக மற்றும் நல்லாட்சிச் சீர்திருத்தங்கள், சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லிணக்க முயற்சிகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்.