கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஏழு மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள்!

மின்சார ஆற்றலை ஸ்திரப்படுத்தி நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், மேலும் 7 சேமிப்பு அமைப்புகள் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த 7 ஆற்றல் சேமிப்பு அமைப்புகளும் பாணந்துறை, பெலியத்த, அம்பாந்தோட்டை, அம்பாறை, வவுணதீவு, வாழைச்சேனை மற்றும் மஹியங்கனை ஆகிய பகுதிகளில் உள்ள மின்சார விநியோகத் துணை மின் நிலையங்களுக்கு அருகில் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த அமைப்புகளின் மூலம் 280 மெகாவோல்ட் மின்சார ஆற்றலைச் சேமிக்க முடியும் என்பதுடன், நாளாந்தம் 70 மெகாவோல்ட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பிற்கு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

சர்வதேச போட்டித்தன்மை வாய்ந்த கேள்விப்பர கோரல்  மூலம் தெரிவு செய்யப்பட்ட விண்ட்போர்ஸ் என்ற தனியார் நிறுவனம் இந்த 7 ஆற்றல் அமைப்புகளையும் நிறுவும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன், மேலும் 6 இடங்களில் இவ்வாறான சேமிப்பு அமைப்புகளை நிறுவும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

முன்னதாக, இத்திட்டத்தின் கீழ் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் கொண்டு வரப்பட்ட 8 அமைப்புகள், தற்போது தெரிவு செய்யப்பட்ட துணை மின்நிலையங்களுக்கு அருகில் நிறுவப்பட்டு வருகின்றன.

இப்பணிகள் ஜூலை மாத இறுதியில் நிறைவடையவுள்ளதுடன், அதன் மூலம் 80 மெகாவோல்ட் மின்சார ஆற்றல் தேசிய மின் கட்டமைப்பிற்கு பங்களிக்கப்படும். இந்த சேமிப்பு அமைப்புகளின் கட்டுப்பாடு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் மின்சக்தி அமைச்சின் கீழுள்ள என்.எஸ்.ஓ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன், அவற்றின் பராமரிப்புப் பணிகள் அந்தந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும்.

கடந்த கால அரசாங்கங்கள், மக்கள் கடுமையான மின்சக்தி நெருக்கடியை எதிர்கொண்டிருந்த போதிலும் இவ்வாறான திட்டங்களை நோக்கி கவனம் செலுத்தவில்லை. இதனால் மின்சார நுகர்வோர் இன்றும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறைக்கப்பட்டு, நிலையான ஆற்றல் விநியோகிக்கப்படும்.

இதன் மூலம் தேசிய மின் கட்டமைப்பை ஸ்திரப்படுத்தி, பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மக்களின் வெற்றியாக அமையும். இந்த திட்டங்களின் மூலம் பெறப்படும் நன்மைகளை எதிர்காலத்தில் நுகர்வோருக்கு நேரடியாக வழங்குவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாகும் என்று துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.