கடந்த வாரத்தில் ‘ தமிழ் புலம்பெயர் செய்திகள்” ஈழத்தமிழ்க்கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமாரை உடனடியாக விடுதலை செய்ய அவரது சட்ட உரிமைகள் மற்றும் நியாயமான நடைமுறைகளை உறுதி செய்யவும், கலைஞன் என்ற வகையில் அவரது படைப்பாக்க மற்றும் வெளிப்பாட்டு மனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் மீறி சனநாயக் கொள்கைகளுக்கு எதிராக அவர் சிறிலங்காவால் கைது செய்யப்பட்டதில் இருந்து அவரைப் பாதுகாக்கவும், சிறிலங்காவிலுள்ள பயங்கரவாதச் சட்டத்தை அனைத்துலக மனித உரிமைகள் தரத்துக்கு ஏற்ப ரத்து அல்லது சீர்திருத்தம் செய்யவும், மக்களின் அடிப்படை மனித உரிமைகளான கருத்துச் சுதந்திரம் மற்றும் பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாக்கவும் அமெரிக்கா சிறிலங்காவிடம் வலியுறுத்த வேண்டுமென அமெரிக்காவில் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்க்கோரூபியோவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்வழி ஈழத்தமிழர் எத்தகைய மனிதஉரிமை பாதுகாப்பைப் பெறுகிறார்கள் என்பதை அனைத்துலக மயப்படுத்திய தமிழ் புலம்பெயர் செய்திகளுக்கு இலக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது. அவ்வாறே சிறிலங்கா பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பாடகர் கைது தொடர்பாக அளித்த சட்டரீதியான அற்புதமான விளக்கத்தையும் இலக்கு பாராட்டுகிறது. பிணையில் பாடகர் விடுவிக்கப்பட்டிருந்தாலும் அவர் மேலான வழக்கினைச் சிறிலங்காவை மீளப்பெற வைக்க அனைத்துலகத் தமிழர்களும் ஒன்றுபட்டுத் தொடர்ந்து உழைக்க வேண்டுமென்பது இலக்கின் இவ்வார அழைப்பாகவுள்ளது.
மேலும் ‘தமிழ் புலம்பெயர் செய்தி’ ஈழத்தமிழர்களுடைய தன்னாட்சி உரிமைக்குக் கல்விக் கருத்தியல் பலத்தை அனைத்துலக அரசியலில் வழங்கக் கூடிய வகையில் ஈழத்தமிழரல்லாத ஐரோப்பிய பாதுகாப்பு ஆய்வுக்கழகத்தின் இணை ஆய்வாளரும் இலண்டன் பொருளியல் மற்றும் அரசறிவியல் கல்லூரியின் பட்டதாரி மாணவருமான ஜோஸ் லுயெங்கோ தனது “ மக்களாட்சியும் இலங்கையில் உள்நாட்டுப்போரும்” என்ற ஆக்கத்தின் முக்கிய செய்திகளையும் ஈழத்தமிழர்கள் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
“பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம் இலங்கையில் வெஸ்ட் மினிஸ்டர் பாராளுமன்ற மாதிரியில் ஏற்படுத்திய சிங்களப் பெரும்பான்மை ஒற்றையாட்சிப் பாராளுமன்ற ஆட்சிமுறை தமிழர்களைப் புறக்கணிப்பதற்கும் தமிழர்களுடன் மோதல்களை உருவாக்கவும் சிங்கள பெரும்பான்மை ஆதிக்கத்தைத் தமிழர் மேல் ஏற்படுத்தவும் வழி வகுத்துள்ளது” என்பதை எடுத்துரைக்கும் இவ்வாக்கம் ஈழத்தமிழர் சமகால அரசியல் வரலாறு குறித்த உண்மையை வெளிப்படுத்தியுள்ளது என்பது இலக்கின் எண்ணமாகவுள்ளது.
“இலங்கையின் சுதந்திரத்திற்குப் பின்னரான அரசியலமைப்புக்களும் தமிழர்களைப் பாதுகாக்கவில்லை. இதனால் சுதந்திரத்தின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட வெஸ்ட்மினிஸ்டர் பாணி சனநாயக ஆட்சி முறைமை உள்நாட்டுப்போருக்கு வழிவகுத்த துருவமயமாக்கலின் சுழற்சியைத் தூண்டியது. சிங்களப் பெரும்பான்மையினர் பிரிவினைக் கொள்கைகளை முன்னெடுக்கவும் தமிழ்ச் சிறுபான்மையினரை அரசியல் அதிகாரத்தை அணுகுவதிலிருந்து விலக்கி வைக்கவும் தூண்டியது” என ஜோஸ் லுயெங்கோவின் ஆய்வு விளக்குகையில் ஈழத்தமிழர் பிரிவினை கோரவில்லை மாறாகத் தங்கள் வரலாற்றுத் தாயகத்தில் தாங்கள் அரசற்ற தேசஇனமாகச் சிறிலங்காவால் ஆக்கப்பட்ட பொழுது தாங்கள் பாதுகாப்புடன் கூடிய அமைதி வாழ்வையும் வளர்ச்சிகளையும் நிர்ணயிக்கும் தங்களின் தன்னாட்சி உரிமையின் அடிப்படையில் தங்களுடைய தாயகத்தின் இறைமையின் மீள் உறுதிப்படுத்தலையே கோரினர் என்ற வரலாற்று பரிணாமத்தை உலகிற்கு தெளிவாக்கி ‘சிங்களவர்களே பிரிவினைவாதிகள்’ என்ற உண்மையை இவ்வாய்வு உறுதிசெய்கிறது.
“இலங்கையின் மரபுவழி வெஸ்ட் மினிஸ்டர் பாணி சனநாயகம் மிகவும் மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி அரசையும் முதலில் வருபவருக்கே வெற்றி’ என்ற தேர்தல் முறை இணைப்பையும் கொண்டதான அழிவுகரமான நிறுவனக் கட்டமைப்பையே உருவாக்கியது. இந்த அமைப்பு அரசியல் கட்சிகளை “ பெரும்பான்மை வாக்குகளின் மூலம் தனித்து ஆட்சி செய்ய அனுமதித்தது. இது பெரும்பான்மை இனக்குழுவின் ஆதிக்கம் மற்றும் பாகுபாடு நிறைந்த முறையில் பிரத்தியேக அரசியல் அதிகாரத்தை பெறவும் தக்கவைத்துக் கொள்ளவும் செயல்படுத்தவும் வழிவகுத்தது. இதனால் பிரச்சினை என்பது வெறும் ஒரு தலைவர், ஒரு கட்சி, அல்லது ஒரு காலகட்ட வன்முறையாக மட்டுமல்ல, அரசியல் அமைப்பிலேயே இருந்தது. அதாவது பெருகி வரும் தமிழ் விரோதக் கொள்கைகள் மூலம் ஒன்றுக்கொன்று போட்டியிடும் சிங்கள அரசியல் கட்சிகளுக்கு வெகுமதி அளிக்கும் அமைப்பாகவே அரசியலமைப்புக்கள் தொடர்ந்தன. சிங்களக் கட்சிகள் போட்டிப் பேரினவாதத்தில் ஈடுபட்டு சிறுபான்மையினரை அதிகாரமற்றவர்களாக்கும் கொள்கைகளையே கடைப்பிடித்தன. இதுவே தமிழ் தீவிரமயமாக்கலை அரசியல் புறக்கணிப்பு மற்றும் சார்பு இழப்புடன் தொடர்புடுத்தியது.” என ஜோஸ் லுயெங்கோ சான்றாதாரப்படுத்துகையில் ஈழத்தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்ட அமைப்பு பயங்கரவாத அமைப்பல்ல ஈழத்தமிழ்ப்போராளிகள் பயங்கரவாதிகளல்ல என்ற உண்மைகளையும் உலகிற்கு வெளிப்படுத்துகின்றது. இதனை உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும் கவனப்படுத்த உழைக்க வேண்டுமென்பது இலக்கின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
மேலும் தமிழ் புலம்பெயர் செய்தி பின்வருவனவற்றையும் இவ்வாய்வின் பின்னணியில் தனது கருத்துக்களாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
1. தீவின் வரலாற்றுப் பிராந்திய யதார்த்தத்தை இவ்வாய்வு அறிக்கை அங்கீகரிக்கிறது. காலனித்துவத்திற்கு முந்தைய காலத்தில் தமிழர்களும் சிங்களவர்களும் தனித்தனி மற்றும் ஒப்பீட்டு அளவில் தன்னாட்சி பெற்ற சமுக அமைப்புக்ககளாக வாழ்ந்தனர் தமிழர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் சிங்களவர்கள் முக்கியமாகத் தென் மேற்கு பகுதிகளிலும் வாழ்ந்தனர் என்பதை என்பது இவ்வாய்வில் தெளிவாக்கப்படுகிறது.
2. இலங்கையின் தற்போதைய மையப்படுத்தப்பட்ட ஒற்றையாட்சி தமிழ் மக்களின் அரசியல் மற்றும் பிராந்திய அடையாளத்தை அழித்த ஒரு காலனித்துவத்துக்குப் பிந்தியகட்டுமானம் என்ற தமிழ் நிலைப்பாட்டை இவ்வாய்வு நிலைப்படுத்துகிறது.
3. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள தமிழர்களின் வரலாற்றுத் தமிழ்த்தாயகத்தை சிங்களப் பெரும்பான்மை பாராளுமன்ற அதிகாரத்தின் வழி நிரந்தரமாக அட்சி செய்து விட்டு பின்னர் அதனைத் தவறாக தமிழ் மக்களின் பங்குபற்றிய சனநாயகம் என வர்ணிக்க முடியாது என்பதையும் இவ்வாய்வு ஆணித்தரமாக நிறுவுகிறது.
தமிழ் புலம்பெயர் செய்தி இன்று தாயகத்திலும் உலகெங்கும் உள்ள இளைய ஈழத்தமிழர்களுக்கு அவர்கள் இலங்கைத் தீவில் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதலாக இன்று வரை தொன்மையும் தொடர்ச்சியுமான இறைமையுடன் வாழ்ந்து வரும் உலகின் மூத்த குடிகளிலொன்று என்ற அறிவூட்டல் இல்லாத காரணத்தினாலேயே இளையவர்கள் அவர்களை விட்டு யாராலும் பிரிக்க இயலாத தன்னாட்சி உரிமையுடையவர்கள் அவர்கள் என்ற அறிவு இல்லாது உள்ளார்கள் என்ற உண்மையைத் தெளிவாக்கியுள்ளனர். அத்துடன் ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் ஈழத்தமிழர்களைச் சிறுபான்மையினர் என்று அழைப்பதை உடன் நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை வரவேற்கும் இலக்கு தேசமக்கள் (Nation) என்றே ஈழத்தமிழர்களைச் அழைத்து அவர்களின் தேசநிர்மாண (Nation Buliding Process) முயற்சிகளை அனைத்துலக மக்களும் அரசுக்களும் அமைப்புக்களும் அங்கீகாரமடையச் செய்ய அனைத்து ஈழத்தமிழர்களும் உழைப்பது ஈழத்தமிழர்கள் ஒவ்வொருவரினதும் சமகால வரலாற்றுக்கடமையாக உள்ளதென்பதை இலக்கு ஒவ்வொருவரின் நெஞ்சிருத்த விரும்புகிறது.
மேலும் தமிழ் புலம்பெயர் செய்தி “மேலோட்டமான சீர்திருத்தங்கள், வெற்று நல்லிணக்கமொழி அல்லது மற்றொரு மையப்படுத்தப்பட்ட அரசியலமைப்பு ஆகியவற்றால் இலங்கையின் நெருக்கடியைத் தீர்க்க இயலாது என்பதை அங்கீகரிக்குமாறும் ஒரு தேசத்தை மற்றொரு தேசத்தின் கீழ் நிரந்தரமாக வைக்கும் ஒரு அரசியல் அமைப்பு நீதியையோ அமைதியையோ வழங்கமுடியாது என்பதை உணருமாறும் உலகை வேண்டியுள்ளது. இலக்கு இதனை வரவேற்கிறது.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதும் அர்த்தமுள்ள தமிழ் இறையாண்மையை மீட்டெடுப்பதும் அனைத்துலக அளவில் கண்காணிப்பு அமைந்த தமிழ் மக்களிடையான குடியொப்பத்தின் மூலம் தமிழ் மக்கள் தங்கள் அரசியல் எதிர்காலத்தைத் தீரிமானிக்க உலகநாடுகள் அமைப்புக்கள் அனுமதிப்பதுதான் முன்னேற்றத்தைத் தரக்கூடிய ஒரே நேர்மையான வழியாகும் என்பதையும் தமிழ் புலம்பெயர் செய்தி வலியுறுத்தியுள்ளது. இதனை ஒவ்வொரு ஈழத்தமிழரும் நெஞ்சிருத்தி அர்த்தமுள்ள இறையாண்மையை மீட்டெடுக்க இயலுமான வகையில் உழைக்க எங்கிருந்தாலும் சனநாயக வழிகளிலான செயற்திட்டங்களை அவரவர் அறிவுக்கும் அனுபவத்துக்கும் ஏற்றவாறு ஒத்த உணர்ச்சியுள்ளவர்களுடன் செயற்படுத்தினால் அதன் வழியாகவே தேசமாக எழுதல் நடைமுறைச்சாத்தியமாகி ஈழத்தமிழரின் ஒருமைப்பாடும் இறைமையும் மீட்டுருவாக்கம் பெறும் என்பது இலக்கின் உறுதியான நம்பிக்கையாகவுள்ளது. இதுவே ஈழத்தமிழர்கள் பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் உள்ளவர்கள் என்ற கருத்தியலை மாற்றுவதற்கான ஒரே வழியென்பதையும் இலக்கு வலியுறுத்திக் கூறவிரும்புகிறது.
ஆசிரியர்



