குற்றவியல் சட்டம் தொடர்பான விடயங்களில் சர்வதேச நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது அவசியம் என தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்பி ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தக பிணக்குகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
எமது நாட்டில் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. 10 – 15 வருடங்கள் கடந்த நிலையில் சில வழக்குகள் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாமல் உள்ளன. அந்த வகையில் மத்தியஸ்த சபை சட்டம் என்பது மிகவும் அவசியமான ஒன்று.
அனைத்து விடயங்களும் நீதிமன்றத்திற்கு செல்லும் போது வழக்குகள் தேங்குவது என்பது இயல்பான விடயம். அதனால் மத்தியஸ்த சபைகளை நிறுவுதல் அவற்றை ஆரோக்கியமானதாக முன்னெடுத்துச் செல்லுதல் அவசியமாகிறது.
அத்துடன் மத்தியஸ்த சபைகளுக்கு நியமிக்கப்படுபவர்கள் மனிதநேயம் உள்ளவர்களாகவும் நடுநிலை தீர்ப்பாளர்களாக இருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இந்த பின்னனிலேயே மத்திய சபை சட்டத்தை நாம் சாதகமான ஒன்றாகப் பார்க்கின்றோம்.
வழக்குகளை விரைவாக முடிவுக்கு கொண்டு வருவதற்கும் வீண் செலவுகள் வீண் கால விரயங்களை குறைத்துக் கொள்வதற்கும் இந்த மத்தியஸ்த சபை நிறுவுதல் மற்றும் மேம்படுத்தல் என்பது முக்கியமாகின்றது.
சமூகத்தில் காணப்படும் பிரச்சினைகளை சமூகத்தின் பெரியவர்கள் மூலமாக தீர்த்துக் கொள்வது என்பது வரவேற்கத்தக்க விடயமாகும். குற்றவியல் சட்டங்களில் பரஸ்பர ஒத்துழைப்பு என்கின்ற விடயம் உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி பரஸ்பர ஒத்துழைப்புக்களை பெற்றுக் கொள்வது முக்கியமாகிறது.
பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு தலைவர்கள் கூட கைது செய்யப்பட்டு வருகிறார்கள் என்ற அடிப்படையில் குற்றவியல் சட்டங்கள் தொடர்பான விடயங்களில் சர்வதேசரீதியான பரஸ்பர ஒத்துழைப்பு இருப்பது சிறந்தது.
மேலும் நீண்ட காலமாக நமது நாட்டை போதைப் பொருட்களின் ராஜ்ஜியமாக அல்லது போதைப் பொருட்களின் களஞ்சியமாக மாற்றிக் கொண்டிருப்பவர்கள் கைது செய்யப்படாமல் அதற்குப் பணியாற்றும் சிறியவர்கள் மட்டுமே கைது செய்யப்படுவதால் அந்த ராஜ்யத்தை எம்மால் கட்டுப்படுத்த முடியாது போகும்.
அதனால் குற்றவியல் சட்டம் தொடர்பான விடயங்களில் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதன் மூலம் சமூகத்தை சீரழிக்கின்ற போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த முடியும். பல நாடுகளிலிருந்து பல முக்கிய போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான தலைவர்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை நாம் வரவேற்கின்றோம் என்றார்



