இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகு மூலம் ஊடுருவி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதற்கு தயாராகும் இந்திய மீனவர்களின் வருகையை தடுப்பதுடன், இலங்கை கடல் வளங்களை பாதுகாத்து தருமாறு இலங்கை அரசாங்கத்திடம் வடமாகாண கடற்றொழிலாளர்களின் இணையம் அவசர வேண்டுகோளினை முன்வைத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பி வைத்துள்ளது.குறித்த விடயம் தொடர்பாக தெளிவு படுத்தும் ஊடக சந்திப்பு இன்று (11) வியாழக்கிழமை காலை மன்னாரில் நடைபெற்றது.
இதன்போது வடமாகாண கடற்றொழிலாளர் களின் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜூன் 15ஆம் திகதி எதிர்பார்க்கப்படும் இலங்கை எல்லை கடற்பரப்பில் தமிழ்நாட்டின் இழுவைப் படகுகளால் மீண்டும் தொடங்க படவிருக்கும் எல்லை தாண்டிய மீன்பிடி நடவடிக்கைகள் குறித்து ஆழ்ந்த மற்றும் அவசரமான கவலையை வெளிப்படுத்துகிறோம்.
பல ஆண்டுகளாக, குறிப்பாக சட்டவிரோத அடிமட்ட இழுவை மீன்பிடி முறைகள் சம்பந்தப்பட்ட இத்தகைய அழிவுகரமான ஊடுருவல்கள், இலங்கையின் கடல் சூழல் அமைப்புகளுக்கு கடுமையான மற்றும் சரி செய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவை முக்கியமான கடல் உணவு இருப்புகளை குறைத்ததோடு குறிப்பாக வடக்கு மற்றும் வடமேற்கு கடலோரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வடக்கு மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
மேலும் சரி செய்ய முடியாத சேதம் ஏற்படுவதற்கு முன்னர், இந்த சட்டவிரோத ஊடுருவல் களை தடுத்து நாட்டின் இறையாண்மைக்கு உட்பட்ட கடல் வளங்களை பாதுகாக்க ஜனாதிபதி கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சு, இலங்கை கடற்படை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரசாங்க அதிகாரிகளும் உடனடி தீர்க்கமான மற்றும் அமல் படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இலங்கை வட மாகாண மீனவ சமூகம் மரியாதையுடனும் உரியது உறுதியுடனும் கேட்டுக்கொள்கிறோம்.
இந்த அழிவுகரமான மீன்பிடி முறைகள் எளிதில் பாதிப்படைய கூடிய கடலடி தளங்களையும் கடல் வாழ்விடங்களும் சேதப் படுத்துவதோடு மட்டுமல்லாமல் இலங்கையின் மீன்பிடித் தொழிலின் நிலைத்தன்மையும் அடிப்படையாக சீர்குலைக்கின்றன.
மேலும் உலகச் சந்தைகளுக்கு தரமான கடல் உணவு வழங்கும் நாட்டின் திறனையும் நேரடியாக பாதிக்கின்றன. அதே நேரத்தில் இலங்கை கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் தற்போதுள்ள அமெரிக்க தீர்வைகள் மற்றும் பிரிவு 301 நடவடிக்கைகளின் கீழ் கூடுதலாக 12.5% தீர்வை விதிக்க ப்படும் அச்சுறுத்தல் உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் அதிகரித்து வரும் அழுத்தங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றனர்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள், அதிகரித்து வரும் செயல்பாட்டு செலவுகள் மற்றும் தீவிரமடைந்து வரும் வர்த்தக தடைகள் ஆகியவற்றின் கூட்டு விளைவானது இலட்சக்கணக்கானோர் வாழ்வாதாரங்களுக்கு ஆதரவளித்து இலங்கை பொருளாதாரத்திற்கு இன்றியமையாத அந்நிய செலாவணி வருவாய் ஈட்டித் தரும் ஒரு தொழில் மீது மிகப்பெரிய மற்றும் தாங்க முடியாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இதனை மிக உயர்ந்த தேசிய முன்னுரிமையாக கருதி இலங்கையின் கடல் எல்லைகளை பாதுகாக்க சட்டத்தின் முழு பலத்துடன் செயல்படுமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக, நிலையான மீன்பிடி மேலாண்மை, பொறுப்பான அறுவடை நடைமுறைகள் மற்றும் இலங்கையின் கடல் சூழலின் நீண்ட கால பாதுகாப்பு ஆகியவற்றை ஆதரிப்பதில் வடக்கு மீனவராகிய நாம் முழுமையாக உறுதி பூண்டுள்ளோம். என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



