பயங்கரவாத தடைச் சட்டத்தை ஜனநாயகத்தை மீறும் வகையில் அரசாங்கம் செயற்படாது

தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தையும், பொது அவசர கால நிலையினையும், நாட்டின் ஜனநாயகத்தை மீறுவதற்காக அரசாங்கம் ஒருபோதும் பயன்படுத்தாது என தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றில் இன்று (9) இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவசர கால நீடிப்பு தொடர்பான இன்றைய விவாதத்தின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பயன்பாடு தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

குறித்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் வாக்குறுதியை வழங்கியே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

தற்போதும் அந்த நிலைப்பாட்டிலேயே அரசாங்கம் இருக்கின்றது. விரைவில் குறித்த சட்டத்தை நீக்குவதற்கு நீதி அமைச்சு உள்ளிட்ட துறைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

எனினும் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், பல உயிர் பலிகளையும் ஏற்படுத்திய மிலேச்சத்தனமான பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியையும் அதன் பின்னணியையும் கண்டறிவதற்காக பயன்படுத்தியது ஒரு குற்றமா என கேள்வி எழுப்புகிறோம்.

எனவே இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்களை கைது செய்வதற்காக தற்போது நடைமுறையில் உள்ள இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

அத்துடன் விரைவில் குறித்த சட்டங்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.