தனது தேசிய மக்கள் சக்தி ஆட்சி, மாற்றத்துக்கான ஆட்சி என்று ஈழத்தமிழர் தாயகத்தில் தேர்தல் காலங்களில் உறுதி கூறி வாக்குப்பெற்று பதவிக்கு வந்த சிறிலங்காவின் இன்றைய அரசத்தலைவர் அநுரகுமார திசநாயக்காவின் ஆட்சியில் என்ன நடக்கிறது?
கிளிநொச்சியில் கலைவிழாவில் பாடிய இளையவர் கைது. உரும்பிராயில் கோயிலில் பாடிய தாயகத்தின் பெருங்கலைஞர் சாந்தனின் மக்கள் இருவரும் கைது இருதேசமென்ற உண்மையை எழுதியதற்காக தீபச்செல்வனின் நூல்கள் இரண்டு தடுத்துவைப்பு மொத்தத்தில் அநுர ஆட்சியில் ஈழத்தமிழர் பாடவும் ஆடவும் எழுதவும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் கருத்துச்சுதந்திரமற்றவர்களாக வெளிப்படையாகவே வாழ்வது தெரிகின்ற பொழுது ஈழத்தமிழர் இறைமையை அநுர ஆட்சி ஒடுக்குகிறது என்பது தெளிவாகிறது என்பதை இலக்கு இவ்வாரத்தில் உலகின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறது.
இளையவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் நிலை அவர்களுக்கு உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தக் கூடியது. இதனால் அவர்கள் எந்த எதிர்வினை செய்தாலும் அவர்களை சிறிலங்கா பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைதாக்கி அவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கக் கூடிய அபாயம் உள்ளதால் ஐக்கிய நாடுகள் சபை ஈழத்தமிழர்கள் காலனித்துவத்தால் தங்கள் தன்னாட்சி உரிமையைப்பயன்படுத்தி தங்களுக்கான பாதுகாப்புடன் கூடிய அமைதிவாழ்வை வளர்ச்சிகளை நிர்ணயிக்கும் தன்னாட்சி உரிமையை நடைமுறைப்படுத்தாது உள்ளனர் என்ற உண்மையை ஏற்று அவர்கள் தன்னாட்சி உரிமையினைப் பயன்படுத்தி தங்களது அரசியல் எதிர்காலத்தை நியமிக்கும் வரை ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க சிறப்புப் பிரதிநிதியொருவரை பலஸ்தீன மக்களுக்கு நியமித்தது போல அனைத்துலகச் சட்டங்களின் கீழ் நியமிக்க வேண்டுமென்பது இலக்கின் கருத்தாகவுள்ளது.
மேலும் தீபச் செல்வனின் நூல்கள் தடுக்கப்பட்டு பலநாள் ஆகியும் கூட அதனை விடுவிக்க வைப்பதற்கான எந்தவொரு அக்கறையுமற்றவர்களாக ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் தங்கள் வாழ்வை முன்னெடுக்கிறார்கள். 1799இல் பிரித்தானிய காலனித்துவ அரசின் இலங்கைக்கான முதல் செயலாளராகப் பதவியேற்ற சேர். கியூ கிளேகோன் (Sir Hugh Cleghorn) ஈழத்தமிழர் இறைமையின் தனித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் இலண்டன் கிழக்கிந்தியக் கம்பெனி மதராசில் இருந்து இலங்கையையும் தமிழகத்தையும் ஆட்சி செய்த காலத்திலேயே இருதேசம் இலங்கையில் உண்டு என்று கூறி 1879 இல் அறிக்கையாகவும் ஆவணப்படுத்தினார்.
1857இல் வரையப்பட்ட யோண் அரோசிமித் வரைபடத்தில் இலங்கைத்தீவில் இரு தேசங்களாக வடக்கு கிழக்கு தமிழர் தேசமாகவும் தென்மேற்கும் மத்திய பகுதிகளும் சிங்களவர்களின் தேசமாகவும் தெளிவான வேறு படுத்தலுடன் வரையப்பட்டதே. இவ்வாறு பல வெளிநாட்டவர்களின் நூல்கள் இலங்கையை இருதேசங்களின் தீவாக அறிவூட்டுகையில் தீபச்செல்வனின் நூலை எந்த நியாயப்படுத்தலின் கீழ் தடைசெய்யலாம். இவற்றை சுட்டிக்காட்டி வாதாடாது ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் சட்டத்தரணிகள் இருப்பதுதான் சிறிலங்கா அரசாங்கம் தான் நினைத்த மாதிரி எல்லாம் ஈழத்தமிழர்களை நடாத்தலாமென்னும் துணிவுக்கு வருவதற்கு மூலகாரணம் என்பதையும் இலக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறது. அதே நேரத்தில் தீபச் செல்வனின் விடயத்தில் அவரது இழப்பை ஈடுசெய்யக் கூடிய உதவிகளைத்தானும் உலகத் தமிழர்களும் செய்யாது இருப்பதும் உலக ஈழத்தமிழரிடையிலும் செயற்திறன் உடன் செயற்திட்டங்கள் வழி செயற்பட இயலாத நிலை தொடர்வதையே உணர்த்துகிறது என்பதையும் இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
அவ்வாறே ஈழத்தமிழரின் சமூக ஊடகங்கள் வலைத்தளங்கள் எப்பொழுதும் மக்களின் பிரச்சினைகள் மக்களின் தேவைகள் மக்களின் பாதிப்புக்களுக்கு குரல்கொடுத்தல் காட்சிப்படுத்தல் இன்றி பொறுப்பற்ற முறையில் ஒருவரையொருவர் திட்டித் தீர்த்தலால் தமக்கு பணமும் புகழும் தேடும் நோக்கையே தமது போக்காகக் கொண்டு திகழ்வதையும் இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது. அத்துடன் குறைபேசு தளமாகவே தம்மை மாற்றிக் கொண்ட சமுக ஊடகங்கள் வலைத்தளங்கள் தமது விருப்பு வெறுப்பை ஊடகத்தில் கொட்டித்தீர்த்து ஒழுங்காகச் செயற்படும் நிறுவனங்களையும் முறிவடைய வைக்கும் கைங்கரியத்திலும் நன்கு பெருவளர்ச்சி பெற்று வருகின்றன. இதனால் ஊடகப்பணி என்பது வாழ்நாள் பொறுப்புள்ள பணி என்பதனை ஏற்படும் உள்ளக்கிளர்ச்சியில் ஊடகவியலாளர்களையே மறக்க வைக்கும் ஆற்றல் உள்ளனவாக இந்த சமுகப் பொறுப்பற்ற சமுக ஊடகங்கள் தம்மை வளர்த்துக்கொண்டுள்ளன என்பது வேதனையான உண்மை என்பதையும் இலக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது. விமர்சனம் என்னும் வடசொல்லுக்கு பரீட்சித்தல் என்பதே பொருள்.
ஒருவர் தனக்குள்ள அறிவு தனக்குள்ள அனுபவம் குறித்து படைப்பை பரீட்சித்தல் என்பதே சிறந்த விமர்சனமாகும். திறனாய்வு என்பது அந்தப்படைப்பில் உள்ள திறனை ஆய்வு செய்தல் என்று பொருள். நான் நினைக்கிறேன் “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே” என்று சொல்கிற தொல்காப்பிய நெறிப்படுத்தலிலும் ஒன்றில் உள்ள உயர்ந்ததையே நாம் வெளிக்கொண்டு வருகின்ற போது சமுகம் உயர்வானதாகத் தன்னைக் கட்டமைத்துக் கொள்ளும் என்கின்ற கருத்து உள்ளது. உண்மையில் தமிழர் என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் தமிழின் அடிப்படையான யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதில் எல்லா ஊரும் மனிதர் வாழவல்ல ஊர்களே எல்லாமனிதரும் நாம் மனிதர் என்ற வகையில் நம் உறவினர் என்ற உண்மையைத் தெரிவிக்கிறது. அப்பொழுதுதான் மனித சமத்துவம் தமிழர்க்கான தமிழின் முதல் அழைப்பாக உள்ளதென்பது தெளிவாகும். அவ்வாறே ‘தீதும் நன்றும் பிறர் தரவாரா’ என்கின்ற அடிப்படை உண்மையையும் தமிழர்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மனிதனும் அறிவுள்ளவன் பகுத்தறிவுத்தன்மையே இதற்குக் காரணம். நான் செய்கிற செயலுக்கு நானே பொறுப் பேற்றுக்கொள்வதே ஏற்புடையது. அதனை விடுத்து அடுத்தவனைத் திட்டித்தீர்ப்பது என்பது தமிழ்மரபல்ல. இதனால்தான் பெரியோரென வியத்தலுமிலமே, சிறியோரென இகழ்தலும் இலமே என்கிற வரியும் மனிதரை பெரியவர் இகழ்வானவர் என வகைப்படுத்தல் என்பதே அனைத்து மனிதசமத்துவமின்மைக்கும் அடிப்படைக்காரணம் என்பதை நெஞ்சிருத்தி அதனை விலத்தப்பழக்குகிறது. இதனால் அவரவருக்குக் கிடைக்கும் வாய்ப்புக்கள் அவரவரது அறிவாக அனுபவமாக மாறுகிறது. ஆதலால் ஒரு நிகழ்வுக்குரிய காரணத்தை அறிய முற்படுதல்தான் உண்மையான பகுப்பாய்வு என்பதைக் கருத்தில் வைத்து, ஆளை வைச்சுவாங்காமல் அந்த காரணத்தைக்கண்டறிந்து அதனை மாற்றுவதா ஏற்பதா என்ற வகையில் திறனாய்வுகளைச் செய்தல் சமுகத்துக்கு நலமளிக்கும்.
மேலும் கழிந்த காலம்தான் தமிழில் உள்ளதே தவிர இறந்த காலமில்லை. ஆதலால் ஒருநிகழ்வு நிகழ்ந்து விட்டால் அதனையே திருப்பித் திருப்பி பேசி மகிழ்வது அல்லது புலம்புவது என்ற போக்கை விட்டு விலகி அதனை அனுபவமாகக் கொண்டு நிகழ்காலத்துக்கான பலமாக அதனை மாற்றி செயற்படத் தொடங்கினாலே எதிர்காலத்தைப் புதுமையுடன் எதிர்கொண்டு காலத்திற்கு ஏற்ப இடத்துக்கேற்ப வாழும் ஆற்றலைப் பெறலாம். உதாரணமாக இன்று ட்ரம்பின் கூற்றுக்களைக் கொண்டு எந்த எதிர்வு கூறலையும் கூறஇயலாது என மேற்குலக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில் அமெரிக்காவை மீளவும் பெரிய அமெரிக்காவாக மாற்றுவேன் என அவர் கடந்த காலத்தை உயர்வாகக் காட்டி நிகழ்காலத்தைக் கட்டமைக்க முயல்கின்றாரே தவிர நிகழ்காலத்தின் மாற்றங்களை உள்வாங்கி எதிர்காலத்தை அணுகும் முறையில் செயற்பட மறுக்கிறார். இதே நிலைதான் தமிழ் அரசியலிலும் உள்ளது. அவர் வல்லரசின் அரசத்தலைவர் என்பதால் மீளவும் புத்துயிர் பெறுகின்றார். ஆனால் ஈழத்தமிழர்கள் அரசற்ற தேசஇனமென்பதால் மீள்புத்துயிர்ப்பைத் தாங்களே முன்னெடுக்க வேண்டிய கஷ்டமான நிலையில் உள்ளனர். மக்கள் இறைமையைக் கொண்டே இதனைச் செய்ய வேண்டியிருப்பதால் தேசிய ஒருமைப்பாடு ஈழத்தமிழரின் விடுதலைக்கான தலையாய நிபந்தனையாக அமைகிறது. ஆனால் ஈழத்தமிழர்கள் செயற்திட்டங்களைச் செயற் படுத்தாது வெற்றுப் பேச்சுக்களால் தாங்களே தங்களின் தேசிய ஒருமைப்பாட்டைச் சிதறடித்து வருகின்றனர் என்பதை இலக்கு வேதனையுடன் வெளிப்படுத்த விரும்புகிறது.
அத்துடன் இன்றைய முதலாளித்துவத்திற்குப் பின்னான நவீன உலகின் அரசியல் நிலப்பரப்புக்கள் ஒருதுருவ அல்லது இருதுருவ முனைவாக்கத்தில் இருந்து பன்துருவ முனைவாக்கம் (Multipolarity) நோக்கி, பொருளாதார தேசியவாதத்துக்கு உச்சமளித்தல் (heightened economic nationalism) என்பதனைத் தமது தலைமை பண்பாகக் கொண்டு காணப்படுகின்றன. ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் இன்றைய உலகின் மூன்று முக்கியதன்மைகளான உலகமயமாக்கல் (globalisation) செயற்கை நுண்ணறிவு இணைப்புடன் கூடிய தொழில்நுட்பம், காலநிலை மாற் றம் என்பவற்றுடன் ஆழமான கருத்தியல் மற்றும் கொள்கைசார் பிளவுகள் உள்ளனவாக உள்ளன. நிலவுகிற ஒரு பொதுவான எண்ணத்துடன் இணையாது நாடுகள் பல்வேறு போட்டித்தன்மைகளையும் ஒன்றுடன் ஒன்று மேற்கவிப்புக்கொண்ட அரசியல் தத்துவங்களையும் கொண்ட சிக்கலான புதிய உலக அரசியல் ஒழுங்குமுறையை தோற்றுவித்துள்ளன.
சமகால உலகில் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கங்களும் தமது பொருளாதார பாதுகாப்பியலை (Protectionism) மையப்படுத்தியே மக்களைக் கவரும் கொள்கைகளையும் (Populism) தேசியவாதக்கொள்கைகளையும் (Nationalism) உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. இதனால் சுதந்திர வர்த்தகம் குறித்த ஒருமித்த பொதுக்கருத்திசைவு பாதிப்புற்றுள்ளது. உள்ளூர் உற்பத்திகளுக்கே ஊக்கஉதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன. வர்த்தக அசைவுகள் எல்லாமே தாயக பொருளாதாரத்தை மீளமைத்தல் ( reshoring) என்னும் நோக்கிலேயே இறக்குமதிப்பொருட்களுக்கு அதிக வரி விதிப்பு ஏற்றுமதிப்பொருட்களுக்கு வரிக்குறைப்புப் பேச்சுவார்த்தைகள் என்பனவற்றின் வழி நகர்கின்றன. இவற்றைக் கவனத்தில் கொண்டு இன்றைய உலக சமுக அரசியல் பொருளாதார எதார்த்த நிலைகளுக்கு ஏற்ப கருத்தரங்குகள் மாநாடுகள் வழியாக காலத்துக்கு ஏற்ற கொள்கை வகுப்புக்களைச் செய்து ஈழத்தமிழர்கள் சமகாலத் தில் அனைத்துலகத்துடனும் ஒப்புரவாகி இறைமையை தக்கவைக்க வழிவகுக்க வேண்டுமென்பது இலக்கின் இவ்வாரக் கருத்தாகவுள்ளது.
ஆசிரியர்



