நிதியமைச்சின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடியாகப் பரிமாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான அறிக்கை, தனக்குத் தனிப்பட்ட முறையில் அனுப்பி வைக்கப்பட்டதை அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிராகரித்துள்ளார்.
அத்துடன், இந்த அறிக்கையை குழுவின் பரிசீலனைக்காக பாராளுமன்றத்தின் ஊடாக உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த நிதிப் பரிமாற்றம் தொடர்பான விரிவான அறிக்கை மற்றும் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சின் செயலாளரிடம் அரசாங்க நிதி பற்றிய குழு முன்னதாகக் கோரியிருந்தது.
இதற்காக அமைச்சுக்கு நான்கு வார கால அவகாசமும் வழங்கப்பட்டிருந்த நிலையில், அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு அது ஹர்ஷ டி சில்வாவின் தனிப்பட்ட பார்வைக்காக அவருக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், “குறித்த அறிக்கை அரசாங்க நிதி பற்றிய குழுவினால் கோரப்பட்டதே தவிர தனது தனிப்பட்ட நலனுக்காக அல்ல என்பதால், இந்த நடவடிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்துரைத்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, “நான் மக்களின் பிரதிநிதி, அத்துடன் தற்போது அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றுகிறேன். இந்த அறிக்கை குழுவினர் கூடி ஆராய்ந்து விவாதிப்பதற்கே கோரப்பட்டது, எனது தனிப்பட்ட பார்வைக்காக அல்ல” என்று குறிப்பிட்டார்.



