இனஅழிப்புச் சமுகமான சிங்களச் சமுகத்தலைமை ஈழத்தமிழர் இறைமையினை தன்னாட்சியை ஏற்குமா? | ஆசிரியர் தலையங்கம் | Ilakku Weekly ePaper 393

மே 18 சரணடைதலின் மறு தொகுப்பல்ல (18 May is not for  repackaging surrender)  என்னும் தலைப்பில் தமிழ்நெற் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் மே 18 வெறுமனே நினைவுநாளல்ல. ஈழத்தமிழர்கள் தங்களைத் தாங்களே எவ்வளவு தூரத்துக்கு முள்ளிவாய்க்கால் உடையதும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துடையவும் அரசியல் பொருள்தன்மைக்கும்  (Political meaning)  இன்னமும் உறுதியுடையவர்களாக உள்ளோம் என்பதை அல்லது இரண்டையுமே ஈழத்தமிழர்களின் பாதுகாப்பான இருப்பினை (Safer Accommodation) உறுதிப்படுத்த எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை மீள்பரிசோதனை செய்கின்ற நாளாக அமைய வேண்டும் என்கிற அழைப்பை விடுத்தது. இதனை இலக்கு சமகாலத்துக்கான புதிய சிந்தனையொன்றுக்கான தலைவாயிலாகக் கருதுகிறது.
வெறுமனே வாய்ப்பாடுகளை (Formulas) வரைகின்ற ஒப்புவிக்கின்ற நாளாக அல்லாமல் மக்களுக்கு இடமளிக்கும் (accommodation) முயற்சியாக அமைய வேண்டும் எனத் தமிழ்நெற் விதந்துரைத்தது. அத்துடன் எந்த அரசுடைய சட்டத்தகுதி குறித்து 22.05. 1972 முதல் இன்று வரை தகராறு உள்ளதோ அந்த அரசுடனான உள்ளக உடன்பாடு வழியாக எவ்வாறு ஈழத் தமிழர்களின் தாயகத்தையும் இறைமையையும். சரணடைய வைக்க இயலாத ஈழத்தமிழர்களின் அரசியல் தகுதி நிலையை வற்புறுத்திக்கேட்டுப் பெற்று பிரச்சினையைச் சீர்மைப்படுத்த இயலும் என்கின்ற நியாயமான கேள்வியையும் தமிழ்நெற் எழுப்பியிருந்தது.
அதே வேளையில் சிறிலங்கா ஈழத்தமிழின அழிப்பு  அரசாக உள்ளதென்பதை உலகில் அமைதிக்காகவும் மனித உரிமைக்காகவும் உழைக்கும் செயற்பாட்டாளர்கள் ஆய்வாளர்கள் பலர்  சமகாலத்தில் சிறிதளவிலேனும் தெளிவுபடுத்தி வருகின்றனர்.  இந்நேரத்தில் இது போலவே பெரும்பாலான சிங்களச் சமுகத்தினரும் ஈழத்தமிழின அழிப்புச் சமுகமாக பரிணாமடைந்துள்ளனர் என்ற வரலாற்றுப் பரிணாமத்தை தமிழ்நெற் உலகிற்குத் தெளிவுபடுத்தி உள்ளது.
எந்தச் சிங்களத் தலைமையாலும்,  ஈழத்தமிழர்களின் காலனித்துவ காலத்துக்கு முன்பிருந்த யாழ்ப்பாண வன்னி அரசுக்களின் நிலப்பரப்பில் ஈழத்தமிழர்களுக்கு 22.05. 1972 இல்  சோல்பரி அரசியலமைப்பினை சிறிலங்கா சிங்கள பௌத்த குடியரசுப்பிரகடனம் மீறியதால் பிரித்தானிய காலனித்துவத்திடம் 1796 முதல் 1972 வரை 176 ஆண்டுகள் இருந்த  ஈழத்தமிழரின் இறைமை  அரசற்ற தேசஇனமாக (Nation without State) 22.05.1972 இல் வரலாற்றுப்பரிணாமடைந்த ஈழத்தமிழர்களிடம் மீண்டு  அவர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தைத் தங்களுக்கான பாதுகாப்பான அமைதியையும் வளரச்சிகளையும் தரவல்ல தேசநிர்மாணத்தை (Nation Building Process) தொடர்கிறது என்ற வரலாற்று உண்மையையும், அதன் அடிப்படையில் ஈழத்தமிழர்களின் இறைமையுள்ள தாயகம், தேசியம், தன்னாட்சி என்ற அடிப்படையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையும், வாய்ப்பேச்சளவில் கூட ஏற்க ஆயத்தமில்லை என்கின்ற உண்மையைத் தனது ஆய்வில் தமிழ்நெற் தெளிவாக்கியுள்ளது என்பதை இலக்கு எடுத்துரைக்க விரும்புகிறது. ரஸ்யாவின் சமுகவியல் விஞ்ஞானி பிளக்நொவ்வின் “ஒரு சமுகம் தனது வர்க்கத்தின் வகை மாதிரியான தலைமைத்துவத்தை உருவாக்கும்” என்பது இவ்விடத்தில் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய கருத்தாகவுள்ளது.
தமிழ்நெற் சிங்கள இனம் இன்று ஈழத்தமிழின அழிப்பு சமுகமாகவே (Genocidal society) விளங்குகின்றது எனக் குறிப்பிட்ட 11 நாட்களுக்கு இடையிலேயே, சர்வசன அதிகாரசபை கட்சியின் உபதலைவரான முனைவர் சன்ன ஜயசுமன உடைய அறிக்கை அதனை  உறுதி செய்துள்ளது.  “எமது நாட்டில் எங்கும் தமிழ் இனப்படுகொலை நடைபெறவில்லை. ஆனால் கடந்த மே 18ம் நாள் வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் கூறி நினைவுநாள் நிகழ்வுகள் இடம்பெற்றன. இதற்கு அநுரகுமார திசநாயக்கா தலைமையிலான அரசாங்கம் இடமளித்தமை கவலையளிக்கிறது.  இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் ரொஷனல் அக்மீமன பாராளுமன்றத்தில் பத்திரிகைச் செய்திகளை மேற்கோள் காட்டி இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்றமையை உறுதிப்படுத்தினார். இவை நாட்டுக்கு அனைத்துலக மட்டத்தில் அபகீர்த்தியை உருவாக்குவதுடன் எதிர்காலத்தில் பல்வேறு பாதிப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலையையும் உருவாக்கும். படங்கள் சின்னங்கள் நிறங்கள் உடன் பிரிவினைவாதிகளை பயங்கரவாதிகளை நினைவு கூறும் இந்நிகழ்வுகள் குறித்து புலனாய்வு துறை அறியுமா? இது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையென்ன? அவ்வாறு நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்றால் யாருடைய அழுத்ததின் பெயரில் இந்த மௌனம் என நாங்கள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்புகிறோம்.
வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பிரிகேடியர் பால்ராஜ் என்பவருக்குப் பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தினார். அவரை நீங்களும் பிரிகேடியராக ஏற்றுக்கொள்கிறீர்களா? இவற்றுக்கு ஜனாதிபதி விளக்கம் அளிக்க வேண்டும்.” என்பது அவ்வறிக்கையின் சாரமாகவுள்ளது. இவ்வாறு ஈழத்தமிழர்கள் தமது மண்ணினது பாதுகாப்புக்காவும் மக்களினது உயிரையும் உடமைகளையும் வாழ்வையும் பாதுகாப்பதற்காகவும்   வீரச்சாவு அடைந்தவர்களுக்கு நன்றியுணர்வுடன் நினைவு கூறும் அடிப்படை மனிதச் சுதந்திரத்துக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ள முனைவர் சன்ன ஜயசுமன,  பிரிகேடியர் பால்ராஜ் அவர்களை மிகக்கேவலமான முறையில் சிங்கள சமுகம் விளங்கிக் கொள்ளும் வகையில் தனது அறிக்கையில் சித்தரித்து உள்ளமை சிங்கள சமுகத்தைத் தொடர்ந்தும் ஈழத்தமிழின அழிப்புச் சமுகமாகவே தக்க வைப்பதற்கான உத்தியாகவும் உள்ளது. . இந்த அறிக்கையொன்றே தமிழ்நெற், சிங்கள சமுகம் ஈழத்தமிழின அழிப்பு சமுகமாக பரிணாமம் அடைந்துள்ளது எனக் கூறியமைக்குச் சிறந்த இவ்வார உதாரணமாகிறது என்பது  இலக்கின் கருத்தாகவுள்ளது. இதனை பிக்குகள் குற்றம் செய்கையில் அவர்களை சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்னும் சனநாயக ஆட்சிக்கான அடிப்படை நிபந்தனையில் இருந்து விடுவித்து 1931ம் ஆண்டின் பௌத்த அறக்கட்டளைச் சட்டத்தைத் திருத்தி “தர்மநீதி” என்ற பௌத்த ஆகமசட்ட நீதிமன்றத்தை அமைத்து பௌத்த மகாசங்கங்களே அவர்களுக்கான நீதியையும் வழங்கும் முறையை இடதுசாரித்துவம் தமது கொள்கையாக வளர்ந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே முன்வருவது தமிழ்நெற்றின் கருத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
அதே நேரத்தில் அரகலிய போராட்டத்தின் முக்கியமானவராக விளங்கிய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் அவர்கள் “1956 முதலே திட்டமிட்ட அடிப்படையில் சிங்கள அரசாங்கங்களால் தமிழ் மக்கள் இனரீதியாக அழிக்கப்பட்டு வருகின்றனர். இது நான் உணர்ச்சி வசப்பட்டுக் கூறும் ஒன்றல்ல பல அனைத்துலக ஆவணங்களில் உறுதிப்படுத்தப்பட்டவொன்று.  2013 யேர்மனியில் நிகழ்ந்த மக்கள் தீர்ப்பாயத்தில் அனைத்துலக கல்வியியலாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களால் அறிக்கை மூலம் இனஅழிப்பாகத் தெளிவாக்கப்பட்டவொன்று. 10.02.2015 இல் வடமாகாணசபையே 1948 முதல் இனஅழிப்பு நடைபெற்று வருவதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. 16.05.2022 இல் வடக்கு மற்றும் கிழக்கின் ஆயர்கள் நால்வரால் தமிழ் மக்கள் இன்றும் இனப்படுகொலைக்கு ஆளாகி வருகிறார்கள் என உறுதிப்படுத்தப்பட்டது” என இணைய ஊடகச் செவ்வியை 29.05. 2026 இல் வழங்கியுள்ளார். இவ்வாறு இனநல்லிணக்கத்துக்காக உழைக்கும் சிங்கள சகோதர்களும் உள்ளனர் ஆயினும் இத்தகையவர்களை ஊக்குவிக்க வேண்டிய தேசிய மக்கள் சக்தி எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதே கவலை அளிக்கும் விடயமாகவுள்ளது என்பதையும் இலக்கு எடுத்துரைக்கவிரும்புகிறது. இதனாலேயே இன்றைய அரசத்தலைவர் அநுரகுமரா திசநாயக்காவின் “யுத்தமற்ற இலங்கை” என்பது நடைமுறைச்சாத்தியமற்றவொன்றாக உள்ளதென இலக்கு கருதுகிறது.  இந்நிலையில் அரசியல் எதார்த்தம் இவ்வாறாக இருக்கையில் கூட்டாட்சி என்கின்ற ஒரு நாட்டில் உள்ள அரசாங்கத்தின் ஆட்சியதிகாரத்தை அந்த அரசாங்கத்தின் இறைமையையே தலைமையாகக் கொண்ட நிலையில் பகிர்கின்ற முறைமை ஈழத்தமிழர்களுக்கு சிங்கள சமுகத்தால் வழங்கப்படுமா? வழங்கப்பட்டாலும் அத்தகைய ஆட்சியில் இனஅழிப்பு எவ்வாறு பாதுகாக்கப்படும் என்கின்ற இயல்பான கேள்விகளை தமிழ்நெற் எழுப்பியிருந்தது.
இதனை உறுதிப்படுத்தும் வரலாற்றுச் சான்றாக  1928 இல் டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு பொறுப்பாட்சியை வழங்க ஒற்றையாட்சி முறைமையை விதந்துரைத்த பொழுதே அமரர் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் பிரித்தானிய வெஸ்ட் மினிஸ்ரர் முறைப் பாராளுமன்ற ஆட்சி முறைமை என்பது பிரித்தானியாவின் நீண்ட கால அரசியல் வரலாற்றின் பின்னர் உருவான அரசியல் பண்பாட்டின் வழியில் அமைந்தது. அத்தகைய நிலை இலங்கைக்கு இல்லை என்பதைத் தெளிவாக விளக்கி அதனை நிராகரித்தமை அமைகிறது.  காலனித்துவ செயலாளருக்கு 13.06. 1945 இல் ஜி.ஜி. பொன்னம்பலம் அனுப்பிய 54/986/ 6/2 no 55  இலக்கத் தந்தியில் டி எஸ் சேனநாயக்கா சிங்களவர்களுக்கு மட்டுமே தலைவர் அவர் ஈழத்தமிழர் உட்பட்ட மற்றைய ஐந்து சமுகங்களுக்காகவும் எதனையும் கதைக்க இயலாது என்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்திருந்தார்.
அவ்வாறே 03.11. 1945 இல் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் காலனித்துவச் செயலாளர் ஹோல் அவர்களுக்கு அனுப்பிய Co 54/987/1 no 96 இலக்கப் 16 பக்க கடிதத்தில் சோல்பரி ஆணைக்கழுவின் விதந்துரைகளையும் முற்றாக நிராகரித்து “ வகுப்புவாத வாய்ப்புற்று” (Canker of Communalism”  ஆரம்பமாகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அதன் முடிபாக பிரித்தானிய பாராளுமன்ற முறைமையிலான அரசியலமைப்பு முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய தொன்று எனவும் அடித்துரைத்திருந்தார். அக்காலத்துத் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் நல்லையா அவர்களும் பிரித்தானிய காலனித்துவ பேராட்சியிலிருந்து விடுபட தமிழர்கள் ரஸ்யாவின் துணை கொண்டு போராடுவோம் என அன்றைய ஆட்சியாளருக்கு எச்சரிப்பும் விடுத்தது வரலாறு. இவை தமிழ்நெற்டின் கூட்டாட்சி குறித்த கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் வரலாற்றுச் சான்றுகளாகவுள்ளன. மேலும் இணைப்பாட்சியே ( Con federalism)  இருதேசங்கள் என்ற நிலையில் ஈழத்தமிழ்த்தேச இனமும் சிங்களத் தேச இனமும் கூட்டிணைப்பான ஆட்சியை வெளியக தன்னாட்சி உரிமையினை இழக்காத நிலையில் மேற்கொள்ளவதே ஆகக்குறைந்த தீர்வாக அமையக் கூடும் என்கின்ற விளக்கத்தையும் தமிழ்நெற் அளித்துள்ளது. ஆயினும் எந்தத் தீர்வும் ஈழத்தமிழர்களின் இறைமையையும் தன்னாட்சியையும் வெளியக தன்னாட்சி உரிமையினையும் அனுமதித்த நிலையிலேயே அது ஈழத்தமிழர்களுக்கான பாதுகாப்பான அமைதியான வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்புடையது என்ற தமிழ்நெற்டின் கருத்தை இலக்கும் இக்கால கட்டத்தில் வழிமொழிவது காலத்தின் தேவையாக உள்ளது.
ஆசிரியர்

Tamil News