முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (29) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்திற்காக, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்குச் சொந்தமான 7.8 மில்லியன் ரூபாய் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் பசில் ராஜபக்ச உள்ளிட்டோரை இந்த வழக்கில் சந்தேகநபர்களாகப் பெயரிடுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் மனுவொன்றின் ஊடாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்தே, சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான உத்தரவை நீதவான் பிறப்பித்தார்.
எனினும், இவர்களைக் கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இவர்களது வீடுகளுக்குச் சென்றபோது, சந்தேகநபர்கள் எவரும் அங்கு இல்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சந்தேகநபர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு வெளிநாட்டு பயணத்தடையை விதிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், பயணத்தடை உத்தரவைப் பிறப்பித்ததுடன், அது குறித்து குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உடனடியாக அறிவிக்குமாறும் உத்தரவிட்டார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சுற்றுலா ஊக்குவிப்பு நடவடிக்கை எனக் கூறி, அரச நிதியில் 12 ஆயிரம் டி-சேர்ட்டுகள் (T-shirts) அச்சிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த டி-சேர்ட்டுகளின் ஒரு பக்கத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புகைப்படமும், மறுபக்கத்தில் அரசியல் கட்சியொன்றின் பெயரும் அச்சிடப்பட்டு, மொனராகலை மாவட்டத்தில் நடைபெற்ற அரசியல் பொதுக்கூட்டம் மற்றும் பிரச்சாரங்களின் போது அவை விநியோகிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.



