மயிலிட்டியில் காணி உரிமையாளர்கள் கறுப்புக் கொடிகளுடன் போராட்டம்

மயிலிட்டியில் உள்ள தங்கள் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறவேண்டும் என கோரி கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டு காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்று (29) ஆறாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

வலி. வடக்கில் கிராம அலுவலர் பிரிவுகளான 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது.

யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில், அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது.

இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், அந்தக் காணிகளை விடுவிக்குமாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் போராட்டங்களை முன்னெடுக்க, காணி உரிமையாளர்கள் முடிவெடுத்திருந்தனர். அதன்படி, இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் போராட்டத்தை நடத்தினர்.

வெசாக் கால பகுதியில் அவ்விடம் முழுவதும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு பாரிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.