மாகாண சபை தேர்தல் விடயத்தில் கூட்டு பிரகடனம் ஒன்று கைச்சாத்து!

01. நீண்டகாலமாகத் தாமதமடைந்து வரும் மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவது மற்றும் அதற்கான தேர்தல் முறைமைகள் குறித்து, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் நடைபெற்றது.

சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இக்கலந்துரையாடலில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதன் முக்கியத்துவம், அது தொடர்ச்சியாகக் காலதாமதமாவதற்கான காரணங்கள் மற்றும் தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இந்த சந்திப்பில் கலந்துகொண்ட 42 எதிர்க்கட்சிகள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளில், ஒரேயொரு கட்சியைத் தவிர ஏனைய அனைத்துப் பிரிவினரும் இணைந்து ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த கூட்டுப் பிரகடனம் தற்போதைய பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கும் ஆளுங்கட்சிக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதன்படி, 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கச் சட்டத் திருத்தத்திற்கு முன்னர் நடைமுறையிலிருந்த பழைய தேர்தல் முறையின் கீழ், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் உடன்பாடு கண்டுள்ளனர்.

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் இறுதிப் பரிந்துரைகள் மற்றும் முடிவுகள் கிடைக்கும் வரை, இந்த பழைய தேர்தல் முறையையே தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை மட்டத்தில், தத்தமது கட்சிகளின் வேட்புமனுக்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவத்தை 25 சதவீதமாக சுயாதீனமான அடிப்படையில் உறுதி செய்வதற்கு அரசியல் கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்நாட்டின் முதன்மை அரசியல் தலைவர்கள் பலர் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

எதிர்க்கட்சிகள் தரப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் , ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் போன்றோர் கலந்துகொண்டனர்.

அத்துடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

ஆளுங்கட்சித் தரப்பில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க கலந்துகொண்டார்.

அத்துடன், மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்குப் பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.